×

திருடுபோகவில்லை என்று அறிக்கை அளித்த நிலையில் கோயிலில் இருந்து 1,300 சிலைகள் மாயம்:அறநிலையத்துறை அதிர்ச்சி

சென்னை: கோயில்களில் இருந்து சிலைகள் எதுவும் திருடுபோகவில்லை என்று நிர்வாக அதிகாரிகள், அறநிலையத்துறைக்கு அறிக்கை அளித்துள்ளனர். ஆனால் சிலை தடுப்பு பிரிவு 1,300 சிலைகள் காணாமல் போனதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல் கமிஷனர் அலுவலகம் குழப்பத்தில் உள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,120 கோயில்கள் உள்ளன. இதில், ஐம்பொன் சிலைகள், மரகத லிங்கங்கள் மற்றும் பழங்கால கற்சிலைகள் என 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன.

இந்த சிலைகளுக்கு வெளிநாடுகளில் விலை அதிகம் கிடைக்கும் என்பதால் சமூக விரோதிகள் வெளிநாடுகளுக்கு கடத்தி சென்று விற்பனை செய்கின்றனர். இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். ஆனால், அதோடு தன்னுடைய பணி முடிந்து விட்டதாக நினைக்கின்றனர். அதன்பிறகு அந்த சிலைகள் தொடர்பான விவரங்களை பதிவேட்டில் சேர்ப்பதில்லை. இதனால், சிலைகளின் விவரங்களும் அறநிலையத்துறைக்கு தலைமைக்கு தெரிவதில்லை. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அலுவலர்கள் பணிமாறுவதாலும், அடுத்து வரும் அலுவலர்களுக்கு சிலை தொடர்பான விவரங்கள் மற்றும் அந்த புகார்கள் குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை.

இதனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் பல ஆண்டுகளுக்கு பிறகு கோயில்களில் காணாமல் போன சிலை மீட்கப்பட்டால் கூட இந்த சிலை எங்களது கோயிலுக்கு உரியது இல்லை என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
குறிப்பாக, சிலைக டத்தல் கும்பல்களிடம் இருந்து மீட்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட சிலைகள் எந்த கோயில்களை சேர்ந்தது என்பது குறித்து தெரியாத நிலையில், அந்த சிலைகளை அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பூஜை செய்யும் நிலை தான் இன்றளவு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள 830 கற்சிலைகள் உட்பட 1300 சிலைகள் காணாமல் போயுள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறநிலையத்துறை தலைமைக்கு தெரியவில்லை. இந்த நிலையில் அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகம் சார்பில், கடந்த 1950ம் ஆண்டில் இருந்து காணாமல் போன சிலை விவரம், அதில், கற்சிலை விவரம், பெயர், உலோக சிலை விவரம், பெயர், காணாமல் போன தேதி/வருடம், களவு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதா? செய்யப்பட்டிருப்பின் முதல் தகவல் அறிக்கை மற்றும் வழக்கின் விவரம் உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்ப கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த கோயில்களில் காணாமல் போன சிலை தொடர்பான விவரங்கள் தெரியவில்லை. இதனால், பெரும்பாலான கோயில் அலுவலர்கள் சார்பில் சிலைகள் எதுவும் காணாமல் போகவில்லை என்று அறிக்கை அனுப்பியுள்ளனர். இது, கமிஷனர் அலுவலகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Treasury , Magic of 1,300 idols from the temple after being reported not stolen: Treasury shock
× RELATED உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி...