×

கோயில் நிர்வாகத்திடம் இருந்து மனைகளை வாங்கி குடியிருப்போருக்கு பட்டா வழங்க அரசு உத்தரவு: வரன்முறைப்படுத்திய பிறகு வழங்க முடிவு

சென்னை: குடியிருப்போரின் நலனை கருத்தில் கொண்டு  கோயில் மனைகளை தமிழக அரசு விலைக்கு வாங்கிய பிறகு, அதை வரன்முறைப்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும் அதன் பிறகு அங்கே வசிப்போருக்கு இலவசமாக பட்டா வழங்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் வீடு கட்டி பல ஆண்டுகளாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். அவ்வாறு வீடு கட்டி வசித்து வருவோர் பட்டா கேட்டால் அறநிலையத்துறை இடம் என்பதால், பட்டா தர மறுக்கின்றனர்.

இதனால், பொதுமக்கள் தாங்கள் பல ஆண்டுகளாக வசிப்பதால், எங்களுக்கு அந்த நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆட்சேபனை இல்லாத நிலங்களை வரன்முறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு தமிழக அரசு சார்பில் பட்டா வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு பட்டா வழங்க முடிவு செய்துள்ளது. இதில், கோயில்களுக்கு சொந்தமான புறம்போக்கு மனைகள் அரசு கோயில் நிர்வாகத்திடம் இருந்து விலைக்கு வாங்கிய பிறகு வரன்முறை செய்ய முடிவு செய்துள்ளது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் 409, நகர பகுதிகளில் 12 இடங்களும், சென்னை நகர்ப்புற பகுதிகளில் 36 இடங்களும், காஞ்சிபுரத்தில் 123 இடங்களும், வேலூரில் 107 இடங்களும், தர்மபுரி மாவட்டத்தில் 70 இடங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 350 இடங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 948 இடங்களும், கோவை மாவட்டத்தில் 308ம், நாமக்கல் 110, ஈரோடு 291, பெரம்பலூர் 204, நாகை 12,218, தஞ்சாவூர் ஊரகப்பகுதிகளில் 1022, நகர்ப்புற பகுதிகளில் 19, திருவாரூர் 333, மதுரை 351,  தேனி 46, கள்ளக்குறிச்சி 248, கிருஷ்ணகிரி 226, செங்கல்பட்டு 129 என ஊரகப்பகுதிகளில் மொத்தம் 18,086 இடங்களும், நகர்ப்புற பகுதிகளில் 76 இடங்களும் வரன்முறைப்படுத்தப்படுகிறது.
இந்த இடங்களை அரசே வாங்கி அந்த மனையில் வசிப்போருக்கு தமிழக அரசு வழங்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையருக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருப்பதாகவும் வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ‘தமிழக அரசு சார்பில் ஆக்கிரமிப்பு நிலங்களை வரைமுறைப்படுத்த கடந்த 2018ல் முடிவு செய்தது. இதை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களில் ஆட்சேபனை இல்லாத நிலங்கள், ஆட்சேபகரமான நிலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஆட்சேபனை இல்லாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டாவும், ஆட்சேபகரமான நிலங்களில் வசிப்போருக்கு மாற்று இடமும் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, இதற்கான வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்’ என்றார்.

* மாநிலம் முழுவதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இனங்களுக்கு பட்டா வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
* ஊரகப்பகுதிகளில் மொத்தம் 18,086 இடங்களும்,     நகர்ப்புற    பகுதிகளில் 76 இடங்களும் வரன்முறைப்    படுத்தப்படுகிறது.

Tags : land ,administration ,tenants , Government order to purchase land from temple administration and issue lease to tenants: Decision to issue after standardization
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!