அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்: அவை மரபுகளுக்கு உட்பட்டு சட்டமன்றத்தில் செயல்பட்டவர்

சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவெய்திய அதிர்ச்சிச் செய்தி கேட்டு பெருந் துயருற்றேன். அவரது மறைவிற்குத் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவில் மூன்று முறை பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று 2016ம் ஆண்டு வேளாண்துறை அமைச்சராக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் அமைச்சரவையில் பதவியேற்றவர் துரைக்கண்ணு. சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதும் துறை சார்ந்த மானியங்களில் பதிலுரையாற்றுகின்ற போதும், அவை மரபுகளுக்கு உட்பட்டுச் செயல்படும் அமைச்சராவார். அவரது மறைவு அதிமுகவிற்கும் சக அமைச்சரவை சகாக்களுக்கும் பேரிழப்பாகும்.

பொதுவாழ்வில் உள்ள அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். இப்போதும் அதையே வலியுறுத்தி தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பொதுவாழ்வில் உள்ள அனைவரும், அனைத்து அரசியல் கட்சியினரும், சுய பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அமைச்சர் துரைக்கண்ணுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சக அமைச்சர்களுக்கும், முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>