நெல்லை அருகே பயங்கரம் சொத்து தகராறில் தந்தை சரமாரி வெட்டிக்கொலை: மகன்கள் வெறிச்செயல்

பணகுடி: நெல்லை மாவட்டம், பணகுடி அழகியநம்பிபுரத்தைச் சேர்ந்தவர் காமராஜ் (65). சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு கென்னடி, ராஜா என்ற இருதயராஜ் (34), சேகர் (28) ஆகிய 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 4 பேரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். பணகுடியில் காமராஜூக்கு இரண்டே கால் சென்ட் காலி மனை சொந்தமாக இருந்தது. இதை 2 வருடங்களுக்கு முன்பு மூத்த மகன் கென்னடிக்கு அவர் உயில் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு 2வது மகன் ராஜா என்ற இருதயராஜூம், 3வது மகன் சேகரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தங்களுக்கும் அந்த நிலத்தை பிரித்து தர வேண்டும் என்று கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, சைக்கிள் கடையின் கதவை உட்புறமாக பூட்டிவிட்டு காமராஜ் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் மகன்கள் இருதயராஜ், சேகர் ஆகியோர் வந்து தூங்கிக் கொண்டிருந்த காமராஜை எழுப்பி தகராறு செய்தனர். தகராறு முற்றவே 2 பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காமராஜை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த அவர் துடிதுடித்து இறந்தார். தந்தையை கொன்றும் ஆத்திரம் தீராத சகோதரர்கள், அண்ணன் கென்னடியை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர்.

ரத்தம் சொட்டும் அரிவாளுடன் தம்பிகள் வந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கென்னடி தப்பி ஓடினார். அவரை இருவரும் விரட்டினர். தலைதெறிக்க ஓடியதில் தவறி விழுந்த கென்னடிக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அக்கம் பக்கத்தினர் திரண்டதால் இருதயராஜூம், சேகரும் தப்பியோடிவிட்டனர். புகாரின்படி பணகுடி போலீசார் வழக்குபதிந்து இருதயராஜ், சேகர் ஆகியோரை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் பெற்ற மகன்களே தந்தையை கொன்ற சம்பவம், பணகுடி சுற்று வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>