பெட்ரோல், டீசல் ஒரு மாதமாக மாற்றமில்லை வர்த்தக சிலிண்டர் ரூ.78 அதிகரிப்பு: வீட்டு காஸ் சிலிண்டர் உயரவில்லை; பீகார் தேர்தலுக்காக நிறுத்திவைப்பா?

சென்னை: நடப்பு மாதத்துக்கான வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.78 அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. இதுபோல், பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதமாக மாற்றமின்றி நீடிக்கிறது. பீகார் தேர்தல் முடிவுக்கு பிறகு இவை விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்பட, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து மாற்றி அமைத்து வருகின்றன.

இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினசரி சிறிய மாற்றங்களுடன் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. பைசா கணக்கில் இந்த ஏற்ற இறக்கம் இருப்பதால், விலை உயரும்போது கண்கூடாக தெரிவதில்லை. கொரோனா பரவல் ஊரடங்கு துவக்கத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கடைசியாக கடந்த மார்ச் 16ம் தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பிறகு, மத்திய மற்றும் மாநில அரசுகள் வரியை உயர்த்தியபோதுதான் விலை உயர்ந்தது. பிரன்ட் கச்சா எண்ணெய் அடிப்படையில்தான் இந்தியாவில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த விலை கடந்த ஜனவரியில் இருந்து 60 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி உச்ச விலையை எட்டிய பிறகு, கடந்த ஏப்ரல் வரை பெட்ரோல் 10 சதவீதம், டீசல் 8.5 சதவீதம் மட்டுமே  குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கடந்த ஏப்ரலில் பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் 20 டாலராக குறைந்து விட்டது. இருப்பினும் அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 42 டாலரை தாண்டியதை காரணம் காட்டி, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 80 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் உயர்த்தின.

கடந்த செப்டம்பரில் விலை குறைப்பு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டன. இதில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் டீசல் விலை ரூ.2.91ம், பெட்ரோல் விலை 90 பைசாவும் குறைக்கப்பட்டது. கடந்த மாதத்தில் கடந்த 2ம் தேதியில் இருந்து நேற்று வரை சுமார் ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படவில்லை. தொடர்ந்து ஒரே விலையில் இருக்கிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் விற்கப்பட்டது. இதுபோல் பெட்ரோல் மும்பையில் ரூ.87.74, டெல்லியில் ரூ.81.06, பெங்களூருவில் ரூ.83.69 எனவும், டீசல் மும்பையில் ரூ.76.86, டெல்லியில் ரூ.70.46, பெங்களூருவில் ரூ.74.63 எனவும் விற்கப்பட்டது.

இதுபோல், மாதந்தோறும் சமையல் காஸ் விலை மாற்றப்படும். ஆனால், 14.2 கிலோ எடையுள்ள மானியமற்ற சிலிண்டர் விலை நடப்பு மாதத்தில் மாற்றமின்றி டெல்லியில் ரூ.594, கொல்கத்தாவில் ரூ.620.50, மும்பையில் ரூ.594, சென்னையில் ரூ.610 என மாற்றமின்றி உள்ளது. ஆனால், ஓட்டல், டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் ரூ.78 அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் சிலிண்டருக்கு ரூ.78 அதிகரித்து ரூ.1,354, டெல்லியில் ரூ.75.50 அதிகரித்து ரூ.1,241.5, மும்பையில் ரூ.76 அதிகரித்து ரூ.1,189.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வராமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் நடந்த மாநில சட்டமன்ற தேர்தல் காலத்தின் போதும், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் மத்திய அரசு பார்த்துக் கொண்டது. அதை தான், தற்போதும் செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

* சிலிண்டர் சப்ளைக்கு ஓடிபி முறை புக்கிங்கிற்கு புது தொலைபேசி எண்

காஸ் சிலிண்டர் சப்ளையில் முறைகேடுகளை தவிர்க்க இந்தியன் ஆயில் நிறுவனம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்படி காஸ் சிலிண்டர், சரியான வாடிக்கையாளருக்கு சென்றடையும் வகையில், டிஏசி என்னும் ஓடிபி எண் பெறும் திட்டம் நேற்று முதல் 100 நகரங்களில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நுகர்வோர் விநியோக அங்கீகார குறியீடு (டிஏசி) என்ற ஓடிபி எண், காஸ் சிலிண்டர் புக்கிங் செய்த வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணை சிலிண்டர் கொண்டு வரும் சப்ளையரிடம் கூறினால் தான், சிலிண்டரை வழங்குவார். இந்த புதிய முறை நேற்று முதல் 100 நகரங்களில் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக சில பகுதியில் சோதனை அடிப்படையில் இது செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஐஓசியின் சென்னை, மதுரை, திருச்சி, கோவை மண்டலங்களில், 20 மாவட்டத்தில் அமல்படுத்தியுள்ளனர். இண்டேன் சிலிண்டரை புக்கிங்செய்ய நாடு முழுவதும் ஒரே தொலைபேசி எண்ணாக 77189-55555 நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Related Stories:

>