பெங்களூரை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பில் நீடிப்பு: பந்துவீச்சாளர்கள் தான் வெற்றிக்கு காரணம்: ஐதராபாத் கேப்டன் வார்னர் பேட்டி

சார்ஜா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் நேற்று இரவு நடந்த 52வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஜோஷ் பிலிப் 32, டிவில்லியல்ஸ் 24, வாஷிங்டன் சுந்தர் 21, குர்கீரத்சிங் 15, கோஹ்லி 7 ரன் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் சந்தீப் சர்மா, ஹோல்டர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் அணியில் வார்னர் 8, விருத்திமான் சகா 39, மணிஷ் பாண்டே 26, வில்லியம்சன், அபிஷேக் சர்மா தலா 8 ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஆட்டம் இழக்காமல் ஹோல்டர் 10 பந்தில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 26 ரன் அடித்தார். 14.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன் எடுத்த ஐதராபாத் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சந்தீப் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். 13வது போட்டியில் 6வது வெற்றியை பெற்ற ஐதராபாத் 14 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. பெங்களூரு 6வது தோல்வியை சந்தித்தது.

வெற்றிக்கு பின் ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறியதாவது: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகளை வெல்வது கட்டாயம் என்பது தெரியும். விஜய் சங்கரை இழப்பது மிகப்பெரிய மிஸ். எங்களுக்காக நாங்கள் உழைத்திருக்கிறோம். இன்று வெற்றிக்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்கள் தான். சிறிய  மைதானமான (சார்ஜா) இங்கு யார்க்கரும் வீச முடியாது. வேகம் குறைந்த பந்துகளையும் வீச முடியாது.

இந்த மாதிரியான நிலையில் சிறப்பாக செயல்பட்டனர். நான் பனியால் ஆச்சரியப்படவில்லை. ஹோல்டர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். இன்று நாம் வெல்ல வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும், அடுத்த ஆட்டத்தில் அதுதான். 2016 ஆம் ஆண்டில் நாங்கள் மூன்று ஆட்டங்களில் வெல்ல வேண்டியிருந்தது, நாங்கள் அதைச் செய்தோம் என்றார்.

பெங்களூரு கேப்டன் விராட்கோஹ்லி கூறியதாவது:  இந்த ரன் ஒரு போதும் போதாது, 140 ரன் எடுத்திருந்தால் ஒரு நல்ல இலக்காக இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் விஷயங்கள் கடுமையாக மாறியது, நாங்கள் கணிக்காத அளவுக்கு நிறைய பனி இருந்தது, டாஸில் வென்றது அவர்களுக்கு கூடுதல் பலம். அவர்கள் சரியான பகுதிகளில் பந்துவீசி ஆடுகளத்தைப் பயன்படுத்தினர். கடைசி போட்டியில் வென்று 2வது இடத்தை தக்க வைக்க முயலுவோம். ஐபிஎல் தொடரில் நான் எப்போதும் பெங்களூர் சிறுவனாகவே இருந்தேன், ஒருபோதும் டெல்லியை நோக்கி நகர்ந்ததில்லை, என்றார்.

கோஹ்லி விக்கெட் எடுத்தது சிறப்பு

ஆட்டநாயகன் சந்தீப் சர்மா கூறியதாவது: ஸ்டெம்பை நோக்கி பந்து வீசுவதே எனது திட்டமாக இருந்தது. இங்கு நிலவும் குளிர்ச்சியால் பந்து ஸ்விங் ஆனது. ஜானி பேர்ஸ்டோவ் எனக்கு பெரிதும் உதவினார். கோஹ்லி மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். எனவே அவரை வெளியேற்றுவது சிறப்பு. இப்போது நாம் ஒரு விளையாட்டைக் கொண்டு வேகத்தைக் கண்டுபிடித்துள்ளோம். நாங்கள் அதைப் பற்றி உற்சாகமாக இருக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றார்.

Related Stories:

>