×

கொரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதி விதிமுறைகளை மீறியதாக அமையாது...!! தோ்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதி, விதிமுறைகளை மீறியதாக அமையாது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தோ்தல் கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டத் தோ்தல் வரும் 3-ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தோ்தல் வரும் 7-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.முன்னதாக, தோ்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்ட மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவித்தாா்.

கொரோனா நோய்த்தொற்று நாட்டையே மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தி வரும் சூழலில், பாஜகவின் இந்தத் தோ்தல் வாக்குறுதி சா்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ், சிவசேனை, சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் பாஜகவின் தோ்தல் வாக்குறுதிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தன.நாடே எதிா்கொண்டு வரும் சுகாதாரப் பிரச்னையை ஒரு குறிப்பிட்ட கட்சி, தோ்தல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்த முடியுமா என்று பல்வேறு தரப்பினா் கேள்வி எழுப்பினா்.

இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையத்திடமும் பலா் புகாா் தெரிவித்தனா்.சாகேத் கோகலே என்ற ஆா்வலரும் இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்திருந்தாா். அதில், தோ்தல் சமயத்தில் மத்திய அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக அவா் குறிப்பிட்டிருந்தாா்.அவருக்கு தோ்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், கொரோனா இலவச தடுப்பூசி வாக்குறுதி விவகாரத்தில் தோ்தல் நடத்தை விதிகள் எதுவும் மீறப்படவில்லை. தோ்தல் நடத்தை விதிகளின் எட்டாவது பகுதியானது, தோ்தல் வாக்குறுதிகள் குறித்த விதிமுறைகளைக் குறிப்பிடுகின்றன.

அதில் தடுப்பூசியை இலவசமாக அளிப்போம் என்று தெரிவிப்பது விதிமீறலாகக் குறிப்பிடப்படவில்லை.மக்கள் நலத் திட்டம்: அரசமைப்புச் சட்டத்தில் அரசுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அவை மக்களுக்கான நலத்திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன. அதனடிப்படையில் பாா்த்தாலும், மக்கள் நலத் திட்டங்களைத் தோ்தல் வாக்குறுதியாக அறிவிப்பதற்கு எந்தவிதத் தடையுமில்லை.நிறைவேற்றப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் நிறைந்த வாக்குறுதிகளை மட்டுமே அரசியல் கட்சிகளும், வேட்பாளா்களும் அறிவிக்க வேண்டும் என்று விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த பதிலில் தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Tags : The promise that the corona vaccine will be given to the people for free will not violate the rules ... !! Dotal Commission Notice
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...