×

அமைச்சர் துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன்...!! அவரது மறைவு அ.தி.மு.கவிற்கு பேரிழப்பு..!! மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்! பொதுவாழ்வில் உள்ள அனைவரும் சுய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்திட வேண்டும். அமைச்சரை இழந்து வாடும் குடும்பத்தினர், சக அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதல் என தெரிவித்துள்ளார். தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று நள்ளிரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘வேளாண்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு மறைவெய்திய அதிர்ச்சிச் செய்தி கேட்டு பெருந் துயருற்றேன்.

அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அ.இ.அ.தி.மு.கவில் மூன்று முறை பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று - 2016-ல் வேளாண்துறை அமைச்சராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் பதவியேற்றவர் துரைக்கண்ணு. சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதும் - துறை சார்ந்த மானியங்களில் பதிலுரையாற்றுகின்ற போதும், அவை மரபுகளுக்கு உட்பட்டுச் செயல்படும் அமைச்சராவார். அவரது மறைவு அ.தி.மு.கவிற்கும் - சக அமைச்சரவை சகாக்களுக்கும் பேரிழப்பாகும்.

பொதுவாழ்வில் உள்ள அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். இப்போதும் அதையே வலியுறுத்தி - தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பொதுவாழ்வில் உள்ள அனைவரும், அனைத்து அரசியல் கட்சியினரும், சுய பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். துரைக்கண்ணை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - சக அமைச்சர்களுக்கும், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : disaster ,Durakkannu ,MK Stalin ,ADMK , I am saddened to hear the hidden news of Minister Durakkannu ... !! His demise is a disaster for ADMK .. !! MK Stalin's condolences
× RELATED தேனியில் சுட்டெரிக்கும் வெயிலால்...