×

திருமங்கலம் அருகே கோயில் திருவிழாவில் 84 ஆடுகள், 80 சேவல்களை பலியிட்டு பிரியாணி பிரசாதம்: ஏராளமானோர் பங்கேற்பு

திருமங்கலம்:  திருமங்கலம் அருகே கோயில் திருவிழாவில், 84 ஆடுகள், 84 சேவல்கள் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு மட்டன் பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஏ.அம்மாபட்டி கிராமத்தில் சடச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். 3 ஆண்டுகளுக்கு பின்பு, பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் மாலை துவங்கியது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கொரோனாவையொட்டி சமூக விலகலுடன் திருவிழா நடந்தது.

திருவிழாவில் பங்கேற்ற அம்மாபட்டி, பன்னீர்குண்டு, பொக்கம்பட்டி, தங்களாசேரி, வலையபட்டி, திருமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் நேர்த்திக்கடனாக ஆடுகள், சேவல்களை வழங்கினர். இதனைத்தொடர்ந்து முதலில் முதன்மைக்காரர்களால் சக்தி கிடாய் அம்மனுக்கு பலியிடப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 84 ஆடுகள், 80 சேவல்கள் பலியிடப்பட்டு மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டது. நேற்று காலை சிறப்பு பூஜை நடந்து, திருவிழாவிற்கு வரி செலுத்திய மற்றும் கிராம மக்களுக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டியும் அம்மனை வேண்டிக் கொள்வோம். நேர்த்திகடனை நிறைவேற்றியவுடன் நடைபெறும் திருவிழாவில் ஆடுகள், சேவல்களை காணிக்கையாக செலுத்துவோம். தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற திருவிழாவில் இதுவும் ஒன்று’’ என்றனர்.

Tags : temple festival ,Thirumangalam , Thirumangalam, temple, festival
× RELATED தருவைக்குளம் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவில் அசன விருந்து