×

வேம்பாரில் ரூ.18 கோடியில் அமைத்தும் மழை நீரை சேமிக்க இயலாத தடுப்பணை: கடலுக்கு வீணாக செல்லும் அவலம்

குளத்தூர்:  வேம்பாரில் குறைவான  உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பு அணையில், மழையால் பெருக்கெடுத்த தண்ணீரை சேமிக்க முடியாத நிலையில் கடலுக்கு வீணாகச் செல்லும் அவலம் தொடர்கிறது. தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேம்பார் பகுதியில் வேம்பார் ஆற்றுப்படுகையில் பருவமழை காலத்தில் பெருக்கெடுக்கும் தண்ணீர் வெள்ளமாக ஆற்றில் தேங்காமல் வீணாக கடலில் கலப்பதால் அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம்  வெகுவாக குறைந்து வந்தது. வேம்பார் பகுதி கிராம மக்கள் ஆற்றுப்படுகையில் மணல் கொண்டு தடுப்புகள் அமைத்து தண்ணீரை தேக்க முயற்சிக்கும் போதெல்லாம் வெள்ள சீற்றத்தால் கரைகளில் ஏற்படும் உடைப்பால் தண்ணீர் வீணாக கடந்து சென்றது. இதை கண்ட அக்கிராம மக்கள் வேம்பாற்று  ஆற்றுப்படுகையில் தடுப்பணை அமைத்தால் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும்  என்பதால் இதுகுறித்து அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்தாண்டு வேம்பாறு  படுகையின் முகத்துவாரத்திற்கு முன்பாகவே தடுப்பணை கட்டுவதற்கு ரூ.18 கோடியில் திட்டம் தயாரித்து  டெண்டர் கோரப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், தடுப்பணை பணிகள்  தொடர்ந்து சுணக்கம் கொண்டதால் கடந்தாண்டு பருவமழையில் பணிகள் பாதிப்புக்குள்ளானதோடு முற்றிலும் தடைபட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வழியாக தடுப்பணை பணிகள் நிறைவுற்றன. ஆனால், வேம்பாரில் குறைவான  உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பணையால், மழையால் பெருக்கெடுத்த  தண்ணீரை சேமிக்க முடியாத நிலையில் கடலுக்கு வீணாகச் செல்லும் அவலம்  தொடர்கிறது. கடந்த இரு நாட்களாக பெய்த பலத்த மழையால் இந்த புதிய தடுப்பணை முழுமையாக நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

எனினும் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே இந்த தடுப்பணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்பதால்  எந்தவித பயனும் இல்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘வேம்பார் ஆற்றுப்படுகையில்  பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு  நபார்டு வங்கி உதவித்திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பில் தடுப்பணை  அமைக்கப்பட்ட போதும் ஆற்றுப்படுகையை தூர்வாராததோடு ஆக்கிரமிப்புகளையும் அகற்றவில்லை. பெயரளவுக்கு குறைவான உயரத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டதால் நேற்று முன்தினம் பெய்த ஒரே நாள் மழையில்  தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிவதோடு வீணாக கடலுக்கு வெள்ளநீர் செல்கிறது. எனவே தற்போது அமைக்கப்பட்ட தடுப்பணையின் உயரத்தை  அதிகப்படுத்தவும் ஆற்றுப்படுகையை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றினால்தான் ஆற்றுபடுகையில் முழுமையாக  தண்ணீர் தேங்குவதோடு வேம்பாரை சுற்றியுள்ள பல கிராமங்களின் நிலத்தடி  நீர்மட்டமும் உயரும்’’ என்றனர்.

Tags : rainwater harvesting dam , Kulathur, dam
× RELATED 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஸ்ரீ...