அதிகாரிகள் உதவியுடன் அரசுக்கு சொந்தமான இடங்கள் பத்திரப்பதிவு: மரக்காணம்-கீழ்புத்துப்பட்டு வரை 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பத்திரப்பதிவுக்கு தடை: நில ஆக்கிரமிப்பாளர்கள் அச்சம்

மரக்காணம்: மரக்காணம், கீழ்புத்துப்பட்டு வரை 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல ஏக்கர் பரப்பளவில் குட்டை, தரிசு, ஏரி தரிசு, மேய்ச்சல் புறம்போக்கு, தோப்பு புறம்போக்கு, வண்டி பாதை, வாய்க்கால், கோயில் புறம்போக்கு இதுபோன்ற பல்வேறு வகையான அரசு இடங்கள் இருந்தது. இவற்றை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பொது நிகழ்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரியல் எஸ்டேட் தொழில் ஆரம்பமானது. அதிலிருந்து இங்குள்ள நிலத்தின் மதிப்பு பல லட்சங்கள் முதல் கோடிகள் வரையில் உயர்ந்து விட்டது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒரு சிலர் அரசு அதிகாரிகளின் உதவியுடன் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விற்று கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பின் காரணமாக இப்பகுதியில் பல ஏரிகள், குளங்கள், கோயில் நிலங்கள் மற்றும் நீர்பிடிப்பு இடங்கள், பொது வழிகள் என அனைத்தும் இப்போது காணாமல் போய்

விட்டது.

இந்நிலையில் அரசுக்கு சொந்தமான அனைத்து ஆக்கிரமிப்பு இடங்களையும் அரசு அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இப்பகுதியில் ஒரு சில இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை மட்டும் அதிரடியாக அரசு அதிகாரிகள் கண் துடைப்புக்காக அகற்றியுள்ளனர். இதுபோல் இன்னும் பல ஏக்கர் பரப்பளவு இடங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக குளம், ஏரிகளின் பரப்பளவு குறுகிக்கொண்டே வருகிறது. மேலும் வரத்து கால்வாய்களும் பல இடங்களில் ஆக்கிரமிப்பால் காணாமல் போய்விட்டது. இதனால் மழைக்காலங்களில் வரும் மழை நீரானது நீர்நிலைகளுக்கு செல்லாமல் தடம் மாறி விளை நிலங்கள் வழியாக சென்று பயிர்களையும் அழித்து விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாயிகள் ஆண்டுதோறும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக மரக்காணத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முதல்  முதலமைச்சரின் தனிப்

பிரிவு வரையில் புகார் கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறை கூறுகின்றனர். ஒரு விவசாயி அல்லது பொதுமக்கள் வீடுகள் கட்ட கூட ஒரு பிளாட் வாங்கினால் அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலர்கள் பல ஆவணங்களை ஆதாரமாக கேட்கின்றனர். ஆனால் அரசுக்கு சொந்தமான இடம், கோயில் இடம், புளியமரங்கள் உள்ள தூது புறம்போக்க்கு, வண்டிப்பாதை போன்ற இடத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது தெள்ளத்தெளிவாக இருந்தும் எந்த அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது என்று தெரியவில்லை.  

இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஆக்கிமிக்கப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான அனைத்து இடங்களையும் உடனடியாக அகற்றி அந்த இடங்களை உடனடியாக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் பல செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு அதிகாரிகள் காலம் கடந்து நடத்திய விசாரணையில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் அரசு மற்றும் பூமீஈஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் மரக்காணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட மரக்காணம் வடக்கு மற்றும் தெற்கு இடங்கள், இதுபோல் மரக்காணம் இ.சி.ஆர் சாலையில் உள்ள ஆலப்பாக்கம், ஊரணி, வட அகரம், பனிச்சமேடு, ஆட்சிக்காடு, கீழ்பேட்டை, செட்டிக்குப்பம், செய்யாங்குப்பம், கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு உள்பட 13 கிராமங்களில் இருக்கும் எந்த இடத்தையும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று வருவாய்த்துறை சார்பில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆணையை மரக்காணம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் முறையாக ஒட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் நில மோசடி கும்பல் வசமாக சிக்குவார்களா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விவசாயிகள் அலைக்கழிப்பு

விவசாயிக்கு சொந்தமான இடத்தை பட்டா மாற்றம் செய்ய சென்றால் அந்த விவசாயிகளுக்கு பட்டா மாற்ற பல ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்கின்றனர். வருவாய் துறையினர் கேட்கும் உரிய ஆவணங்களை அந்த விவசாயி கொடுத்தாலும் முக்கிய பேப்பர் இல்லை என்று காரணம் கூறி பட்டா மாற்றம் செய்யாமல் அதிகாரிகள் நிராகரித்து விடுகின்றனர். இதனால் பல விவசாயிகள் தங்களது பரம்பரை சொத்துகளை பட்டா மாற்றம் செய்யாமலேயே பல ஆண்டுகளாக விவசாயம் செய்யும் அவலநிலை உள்ளது. ஆனால் போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்யும் இடத்துக்கு எந்த அடிப்படை ஆவணங்களும் இல்லாமல் முக்கிய பேப்பரை மட்டும் வாங்கிக்கொண்டு உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories:

>