அறந்தாங்கி காவல்துறை வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மழை, வெயிலில் வீணாகும் அவலம்: ஏலம்விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

அறந்தாங்கி: அறந்தாங்கி காவல்துறை வளாகத்தில் வழக்குகளில் தொடர்புடைய இருசக்கர வாகனங்கள் வெயிலிலும், மழையிலும் கிடந்து வீணாவதால், அந்த வாகனங்களை ஏலமிட்டு, அதன்மூலம் கிடைக்கும் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்துக்களில் சிக்கும் வாகனங்கள், கொலை, கொள்ளை, திருட்டு, கடத்தல் வழக்குகளில் சிக்குவோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என பல்வேறு வகையான வழக்குகளில் தொடர்புடைய 2 சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல்நிலைய வளாகத்தில் பாதுகாப்பாக வைப்பது வழக்கம். அத்தகைய வாகனங்களை ஒரு குறிப்பிட்ட இடைவெளியிலோ, அல்லது வழக்கு முடிந்த வாகனங்களையோ காவல்துறையினர் ஏலம் விட்டு விற்பனை செய்வது வழக்கம். இதனால் காவல்நிலையங்களில் வழக்குகளில் தொடர்புடைய ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் சமீபகாலமாக இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து வருவதால், அந்த விபத்துக்களில் சிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைப்போல ஏனைய குற்றவழக்குகளில் சிக்குவோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் இருசக்க வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து வருகிறது.

அறந்தாங்கியில் பேராவூரணி சாலையில் காவல்துணை கண்காணிப்பாளர் இல்லம், அவரது முகாம் அலுவலகம், அறந்தாங்கி காவல்நிலையம், அறந்தாங்கி போக்குவரத்து காவல்நிலையம், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல்நிலையம், காவலர் குடியிருப்புகள் அடங்கிய காவல்துறை வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் விபத்தில் சிக்கிய, குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் உரிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலிலும், மழையிலும் கிடக்கின்றன. இங்கு உள்ள வாகனங்களில் ஒரு சில வாகனங்கள் ஒன்றிரண்டு வருடங்களுக்குள் வாங்கப்பட்ட வாகனங்களாகும். இந்த வாகனங்களும் யாரும் பயன்படுத்தாமல் வீணாகி வருகின்றன. மேலும் இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து பாம்பு, பூரான், தேள் போன்ற விஷஜந்துக்கள் உற்பத்தியாகி, காவலர் குடியிருப்பு பகுதிகள் புகும் நிலையும் உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது: காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், விபத்துக்களில் சிக்கும் வாகனங்கள் என ஏராளமான இருசக்கர வாகனங்கள் காவல்துறை வளாகத்தில் நிறுத்தப்பட்டு வெயில், மழையில் கிடந்த வீணாகி வருகின்றன. இந்த வாகனங்களை முறையாக நீதிமன்ற அனுமதி பெற்று, அவற்றை ஏலமிட்டு விற்பனை செய்யலாம். அவ்வாறு வாகனங்கள் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும். வழக்கு முடிந்து, அந்த வாகனத்தை விடுவிக்கும் நிலை ஏற்படும்போது, நீதிமன்றம் மூலம் விற்பனை செய்யப்பட்ட வாகனத்தின் தொகையை அவரிடம் கொடுத்து விடலாம். வழக்கு அவருக்கு எதிராக முடிந்தால், அந்த தொகையை அரசின் கணக்கிற்கு கொண்டு சென்றுவிடலாம். அவ்வாறு செய்வதால், வாகனங்கள் வீணாகாமல் யாருக்காகவாவது உபயோகப்படும் என்று கூறினார். எனவே தமிழக அரசு அறந்தாங்கி காவல் நிலைய வளாகத்தில் குவிந்து கிடக்கும் இருசக்கர வாகனங்களை ஏலம் விட்டு, அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>