×

டெல்லி கேப்பிடல்சை போட்டு தாக்கியது மும்பை: பந்துவீச்சில் போல்ட், பூம்ரா அமர்க்களம்

துபாய்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. தொடர்ச்சியாக 4வது தோல்வியை சந்தித்ததால் டெல்லி அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் ஹர்திக், பேட்டின்சனுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், கோல்டர் நைல் இடம் பெற்றனர். டெல்லி அணியில் ரகானே, தேஷ்பாண்டே, அக்சர் நீக்கப்பட்டு பிரவீன் துபே, பிரித்வி ஷா, ஹர்ஷல் பட்டேல் சேர்க்கப்பட்டனர்.

பிரித்வி, தவான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே தவான் டக் அவுட்டாகி நடையை கட்ட, கேப்பிடல்சுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. பிரித்வி 10 ரன்னில் வெளியேற, கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் - ரிஷப் பன்ட் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 25, ஸ்டாய்னிஸ் 2, பன்ட் 21 ரன்னில் பெவிலியன் திரும்ப, டெல்லி 62 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. மும்பை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஹர்ஷல் 5, ஹெட்மயர் 11, அஷ்வின் 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இன்னிங்சின் கடைசி பந்தில் ரபாடா (12 ரன்) ரன் அவுட்டானார். டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன் மட்டுமே எடுத்தது. மும்பை பந்துவீச்சில் போல்ட், பூம்ரா தலா 3 விக்கெட், கோல்டர் நைல், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. இஷான் கிஷண், டி காக் இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவரில் 68 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. டி காக் 26 ரன் எடுத்து (28 பந்து, 2 பவுண்டரி) நார்ட்ஜ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து இஷானுடன் சூர்யகுமார் இணைந்தார். அதிரடியாக விளையாடி டெல்லி பந்துவீச்சை சிதறடித்த இஷான் 37 பந்தில் அரை சதம் அடித்தார். மும்பை அணி 14.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து மிக எளிதாக வென்றது. இஷான் 72 ரன் (47 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), சூர்யகுமார் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இஷான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர்ச்சியாக 4வது தோல்வியை சந்தித்த டெல்லி அணி, புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் இருந்தாலும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்வதில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.


Tags : Mumbai ,Delhi Capitals , Mumbai hit Delhi Capitals: Bolt in bowling, Boomra Amarkalam; Bolt in bowling, Boomra Amarkalam
× RELATED 29 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...