பீகாரில் பாஜ அளித்துள்ள இலவச தடுப்பூசி வாக்குறுதி தேர்தல் விதிமீறல் கிடையாது: தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: ‘தேர்தலில் வெற்றி பெற்றால், மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்’ என பீகாரில் பாஜ அளித்துள்ள வாக்குறுதியில் தேர்தல் விதிமுறை மீறல் எதுவுமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 28ம் தேதி முடிந்த நிலையில், நவம்பர் 3, 7ம் தேதிகளில் 2 மற்றும் 3ம் கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன. இங்கு, முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுகிறது.

இதற்கான தேர்தல் வாக்குறுதியை கடந்த மாதம் 22ம் தேதி, பாஜ வெளியிட்டது.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அத்தேர்தல் அறிக்கையில், ‘பாஜ கூட்டணி வெற்றி பெற்றால், மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ‘கொரோனாவிலும் பாஜ அரசியல் செய்கிறது. இது, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்,’ என்று அவை குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், சமூக ஆர்வலர் சாகத் கோகலே என்பவர், இந்த வாக்குறுதி பற்றி தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டார். இதற்கு தேர்தல் ஆணையம் நேற்று அளித்துள்ள பதிலில், ‘ஒரு மாநிலத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்துவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பது இயல்பானதுதான். வாக்காளர்களை கவர்வதற்காக இதுபோன்ற யுக்திகள், எல்லா கட்சிகளாலும் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகின்றன.

வாக்குறுதியை நிறைவேற்றுவது என்பது வெற்றி பெறும் வேட்பாளருக்கும், வாக்காளர்களுக்கும் இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கை சம்பந்தப்பட்டது. எனவே, இந்த வாக்குறுதியில் தேர்தல் விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை,’ என்று கூறப்பட்டுள்ளது.

* ‘அதிர்ச்சி அளிக்கிறது’

தேர்தல் ஆணையத்தின் விளக்கம் பற்றி சாகத் கோகலே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தேர்தல் ஆணையம் எளிதாக இதை புறக்கணித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு நன்மை செய்வதாகக் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதன் மூலம், தேர்தல் நடைமுறை சீரழிக்கப்பட்டு உள்ளது,’ என கூறியுள்ளார்.

Related Stories:

>