வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கலா?... மாவட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு

வேலூர்: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கலா? என மாவட்ட வழங்கல் அலுவலர் திடீரென ஆய்வு செய்தார்.  கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காயம் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டிலும் ஒரு கிலோ வெங்காயம் ₹120க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியும், பெரும் ஏமாற்றத்தையும் அடைந்துள்ளனர். வேலூர் விருதம்பட்டில் உள்ள பசுமை பண்ணை நுகர்வோர் அங்காடியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ45க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் வெங்காயம் பதுக்கி வைக்கப்படுவதாக, கலெக்டருக்கு புகார் வந்தன. அதன்பேரில், கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் பானு, பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் இன்று காலை நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, கடையில் உள்ள வெங்காயத்தின் இருப்பு, மற்றும் விலை விவரங்களை கேட்டறிந்தனர். இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் பானு கூறுகையில், ‘வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கப்படுகிறதா? என கலெக்டர் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி, ஆய்வு செய்து வருகிறோம்.

மார்க்கெட்டில் உள்ள வெங்காயம் மொத்த வியாபாரிகள் கடைக்கு 25 டன்னும், சில்லறை வெங்காய வியாபாரிகள் 2 டன் வெங்காயம் மட்டும் இருப்பு வைக்க வேண்டும். விலை தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, மார்க்கெட் விலை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது’ என்றார்.

Related Stories:

>