மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் நடவு வயல்களில் காயும் நெற்பயிர்கள்: வடகிழக்கு பருவமழைக்கு காத்திருக்கும் விவசாயிகள்

வலங்கைமான்: வலங்கைமான் தாலுகாவில் நடவு பணிகள் முடிவுற்ற நிலையில் நீரியல் மேலாண்மையின் அலட்சியத்தால் பாசனத்திற்கு மேட்டூர்  அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் தண்ணீர் இன்றி காயும் நடவு பயிர்கள் வடகிழக்கு பருவமழையின் வருகைக்காக காத்திருக்கின்றன.டெல்டா மாவட்டங்களில் கடந்த எட்டு ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை குறைவு காரணமாகவும்,  கர்நாடகாவிடமிருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கேட்டுப்பெறாததாலும் மேட்டூர் அணை காலதாமதமாகவே திறக்கப்பட்டு வந்தது. இதன்  காரணமாக மூன்றுபோக சாகுபடி முடிவிற்கு வந்து, ஒருபோக சம்பா சாகுபடியே மிகுந்த போராட்டத்திற்கு இடையே மேற்கொள்ளப்பட வேண்டிய  நிலை ஏற்பட்டது. காலதாமதமாக மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்தது.

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மேட்டூர்அணை நீர் மட்டம் நூறு அடியை தாண்டி இருந்த நிலையில் ஜூன் மாதம் 12ம் தேதி பாசனத்திற்கு  தண்ணீர் திறக்கப்பட்டது. 16ம் தேதி கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனையடுத்து இந்த ஆண்டு சம்பா சாகுபடி குறித்த நேரத்தில்  துவங்கலாம் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்தும் விவசாயிகளின் தேவையறிந்து  பாசனத்திற்கு தண்ணீரை பொதுப்பணித்துறை திறந்துவிடவில்லை.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் நடப்பு சம்பா பருவத்தில் சுமார் ஒன்பதாயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில்  இயந்திர நடவு, கைநடவு மற்றும் நேரடி விதைப்பு மூலம் நடவுபணிகள் முடிவுற்றுள்ளது. ஆட்கள் பற்றாக்குறை மற்றும் செலவீட்டுத்தொகை  ஆகியவற்றை குறைத்திடும் விதமாக சுமார் இரண்டாயிரம் ஹெக்டேரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நடப்பு தாளடி பருவத்தில்  சுமார் ஐந்தாயிரத்து 646 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சம்பா சாகுபடி பணிகள் முடிவுற்ற நிலையில் தாளடி நடவு பணிகள் சுமார் பத்து  சதவீதம் மட்டுமே உள்ளது. அவை விரைவில் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலங்கைமான் பகுதியில் காவிரி கோட்டத்திற்கு உட்பட்ட குடமுருட்டி ஆறு மற்றும் வெண்ணாறு கோட்டத்திற்கு உட்பட்ட வெண்ணாறு, வெட்டாறு  மற்றும் பாசன வடிகால் ஆறான சுள்ளன்ஆறு ஆகியவை மூலம் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பாசன நீரின் தேவையறிந்து சுழற்சி  முறையில் காவிரி கோட்டம் மற்றும் வெண்ணாறு கோட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக பாசனத்திற்கு  தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தற்காலிகமாக  நிறுத்தப்பட்ட நிலையில் ஆறுகள், வாய்க்கால்கள் தண்ணீர் இன்றி காணப்படுகின்றது. அதன் காரணமாக விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி பணிகளை  மிகவும் சிரமத்துடனே மேற்கொண்டு வந்தனர். மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் விவசாயிகளின் தேவைஅறிந்து தண்ணீர்  திறப்பதில் நீரியல் மேலாண்மை தோல்வி அடைந்து விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். வயல்கள் தண்ணீர் இன்றி காயத் தொடங்கியதும்  மேட்டூர் அணை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதும், அப்போது மழை பெய்வதால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதும் தொடர் கதையாக உள்ளது.

வலங்கைமான் பகுதியில் புலவர்நத்தம், ஆலங்குடி, லாயம், கோவிந்தகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்ட வயல்கள் தண்ணீர்  இல்லாமல் காய்வதால் அதிக அளவில் களைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது. அதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகின்றது.மேலும் தண்ணீர் இல்லாததால் களைக்கொல்லி மருந்தினை விவசாயிகள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில்  வடகிழக்கு பருவமழை துவங்கும்முன் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் முடிவுற்ற நிலையில் உரிய நேரத்தில் உரம் தெளித்து பயிர்களின் வளர்ச்சி  வேகத்தை ஊக்கப்படுத்த முடியாத நிலையே உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.

Related Stories:

>