×

திருவண்ணாமலையில் தொடர்ந்து 8வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

* கிரிவலப்பாதை வெறிச்சோடியது * போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தொடர்ந்து 8வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் கிரிவலம்  செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். திருவண்ணாமலையில், மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது. தீபமலை அமைந்துள்ள 14 கி.மீ. கிரிவலப்பாதையை  லட்சக்கணக்கான பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். அதற்காக, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும்  மாதந்தோறும் பக்தர்கள் வருவது வழக்கம். அதையொட்டி, சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். அதனால், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி  நாட்களில், திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சிதரும்.

ஆனால், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால்,  திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து 8வது மாதமாக, நேற்றும் பவுர்ணமி கிரிவலம்  செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பவுர்ணமி கிரிவலத்துக்கு மட்டும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.இந்நிலையில், ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று மாலை 6.41 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 8.45 மணிக்கு  நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று மாலை பக்தர்கள் தனித்தனியாகவும், குடும்பமாகவும் கிரிவலம் செல்ல முயன்றனர்.

ஆனால், கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், கிரிவலம் செல்ல  முயன்ற பக்தர்களை தடுத்து திருப்பி அனுப்பினர். மேலும், கிரிவலப்பாதை வழியாக கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களையும்  அனுமதிக்கவில்ைல.கிரிவலப்பாதை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எஸ்பி அரவிந்த் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட  வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் விழிப்புணர்வு நடைமுறைகளை பின்பற்றி பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதித்தனர்.

Tags : Devotees ,Pavurnami Kiriwalam ,Thiruvannamalai , Devotees banned from visiting Pavurnami Kiriwalam for the 8th consecutive month in Thiruvannamalai
× RELATED கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்