×

ஐபிஎல் டி20 லீக்: கிங்ஸ் லெவனை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தல்: 99 ரன் விளாசினார் கிறிஸ் கேல்

அபுதாபி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.  ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் அங்கித் ராஜ்பூத்துக்கு பதிலாக வருண் ஆரோன் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. கேப்டன் லோகேஷ் ராகுல், மன்தீப் சிங் இருவரும் இன்னிங்சை தொடங்கினர்.  மன்தீப் சிங் சந்தித்த முதல் பந்திலேயே தங்க முட்டை போட்டு வெளியேற, கிங்ஸ் லெவனுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் விக்கெட் கிடைத்ததால் ராஜஸ்தான் வீரர்கள் ஆர்ப்பரித்தனர். ஆனால், அவர்கள் விக்கெட் வீழ்த்தி வம்பை வம்பை வாங்கியிருக்கிறார்கள் என்பதை உணரவில்லை. அடுத்து உள்ளே வந்த ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கேல் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு பஞ்சாப் பந்துவீச்சை பதம் பார்த்தார்.

 போதாக்குறைக்கு, அவர் கொடுத்த சில கேட்ச் வாய்ப்புகளை ‘கொட்டாவி விட்ட’ ராஜஸ்தான் வீரர்கள் கோட்டைவிட்டு வீணடித்தனர். இந்த அதிர்ஷ்ட ‘வாழ்வு’களை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கேல் 30 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். மறு முனையில் ராகுல் சற்று நிதானமாக விளையாடினாலும், ஸ்கோர் வேகம் தடைபடாமல் பார்த்துக் கொண்டார்.  இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ராயல்ஸ் பந்துவீச்சாளர்கள் விழி பிதுங்கினர். ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் சிக்சர் விளாசி அரை சதத்தை பூர்த்தி செய்ய விரும்பிய ராகுல் (46 ரன், 41 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) திவாதியாவிடம் பிடி கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து கேலுடன் இணைந்த நிகோலஸ் பூரனும் அதிரடியில் இறங்க, பஞ்சாப் ஸ்கோர் வேகம் தொய்வின்றி தொடர்ந்தது.  கேல் - பூரன் இருவரும் 3வது விக்கெட்டுக்கு 20 பந்தில் 41 ரன் சேர்த்தனர். பூரன் 22 ரன் (10 பந்து, 3 சிக்சர்) விளாசி ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் எல்லைக் கோட்டருகே திவாதியாவிடம் பிடிபட்டார். கேல் 1000: தியாகி வீசிய 19வது ஓவரின் 5வது பந்தை சிக்சருக்குத் தூக்கிய கேல், டி20 போட்டிகளில் 1000 சிக்சர்கள் என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார்.

 நிச்சயமாக சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரின் 4வது பந்தில் அவர் 99 ரன்னில் (63 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) கிளீன் போல்டானார். இதனால் கடும் விரக்தி அடைந்த கேல் மட்டையை ஓங்கி வீச அது அவரது கையில் இருந்து நழுவி காற்றில் பறந்தது. ஐபிஎல் வரலாற்றில் 99 ரன்னில் 2 முறை ஆட்டமிழந்த ஒரே பேட்ஸ்மேன் கேல் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி பந்தை மேக்ஸ்வெல் வீணடித்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் இதுவரை ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது பரிதாபமான புள்ளி விவரம் தான்.  பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது. மேக்ஸ்வெல் 6, ஹூடா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 186 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது.

 இந்த  அணியில், பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 50 ரன் (26 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசினார். இதுபோல் சஞ்சு சாம்சன் 48 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்ஸர்), ராபின் உத்தப்பா 30 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்ஸர்) விளாசினர். ஜோஸ் பட்லர் 22 ரன், ஸ்டீவன் ஸ்மித் 31 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 17.3 ஓவர்கள் முடிந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.



Tags : IPL T20 League ,Rajasthan Royals ,Kings XI ,Chris Gale , IPL T20 League: Rajasthan Royals beat Kings XI: Chris Gale scores 99
× RELATED ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் திணறல்