×

தொடர் தாக்குதல்களால் அதிர்ச்சி: பிரான்சில் பலத்த பாதுகாப்பு: சர்ச்சில் 3 பேரை கொன்ற துனிசியா நாட்டவர் கைது

நைஸ்: அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்துள்ள பிரான்ஸ் அரசு, நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது. பிரான்சில் முகமது நபிகளின் வரைபடம் வெளியிடப்பட்டதை கண்டித்து, உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்துக்காக பிரான்சில் கடந்த 2 மாதங்களாக அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளியில் மாணவர்களுக்கு முகமது நபிகள் வரைபடத்தை காட்டிய ஆசிரியர் கொல்லப்பட்டு, அவருடைய தலை துண்டிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து மற்றொரு தாக்குதலும், நேற்று முன்தினம் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது. தேவாலயத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டது. மேலும், 3 பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்தியவன் 47 வயதுடைய துனிசியா நாட்டை சேர்ந்த இப்ராகிம் இசோயி என்று தெரிய வந்துள்ளது. அவன் கைது செய்யப்பட்டு உள்ளான். தாக்குதலின் போது கையில் அவன் தனது மதநூலை வைத்திருந்தான். அவனிடம் இருந்து பயன்படுத்தாத இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பிரான்ஸ் தீவிரவாத ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். கடந்த 1999ல் துனிசியாவில் பிறந்த இவன், கடந்த செப்டம்பர் 20ம் தேதி படகு மூலம், சட்ட விரோதமாக குடியேறுபவர்கள் செல்லும் பாதையில், இத்தாலியில் உள்ள லாம்பெதுசா தீவை அடைந்துள்ளான். அங்கு அவன் தீவிரவாத தாக்குதல் நடத்தினான். பிறகு அங்கிருந்து வட இத்தாலியின் துறைமுக நகரான `பாரி’க்கு அக்டோபர் 9ம் தேதி வந்துள்ளான் என்று கூறிய போலீசார், அவன் எப்போது நைஸ் நகரை அடைந்தான் என்பது பற்றி கூறவில்லை.போலீசார் அவனை சுட்டு பிடித்தனர்.

இதில் 14 குண்டுகள் அவன் மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். தேவாலயத்தில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, பிரான்ஸ் மக்களிடையே பீதி நிலவுகிறது. இதுபோன்ற மேலும் பல தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்று கருதப்படுவதால், நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொலைகாரனின் தாய் கதறல்
சவுதியில் உள்ள அல்-அராபியா தொலைகாட்சிக்கு இப்ராகிம் இசோயியின் தாய் அளித்த பேட்டியில், `‘எனது மகன் பிரான்சில் இருப்பதாக கூறியதும் எதற்காக அங்கு சென்றான்? என யோசித்தேன். அவனிடம், `உனக்கு பிரெஞ்சு மொழி தெரியாது. அங்கு யாரையும் தெரியாது. அங்கு தனியாகவா வாழப் போகிறாய்? எதற்காக அங்கு சென்றாய்?,’’ என அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டேன் என்றார் கண்ணீருடன்.



Tags : attacks ,France ,Tunisian ,Churchill , Tunisian man arrested for killing 3 in Church
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...