×

இதுவரை இல்லாத அளவிற்கு சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரேநாளில் 20 ஆயிரம் பத்திரங்கள் பதிவு: 123 கோடி வருவாய் எட்டியது

* சென்னை மண்டலம் 48.72 கோடி வசூல்
* பதிவுத்துறை தலைவர் சங்கர் தகவல்

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரே நாளில் 20 ஆயிரம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, இதன் மூலம் ரூ.123 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று பதிவுத்துறை தலைவர் சங்கர் தெரிவித்தார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் தினமும் சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆவணங்கள் வரை பதிவு செய்யப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை எதிர்பார்த்த அளவு பத்திரப்பதிவு இல்லை. குறிப்பாக, கடந்த ஏப்ரலில் 7171 பத்திரங்கள் பதிவாகி ரூ.30 கோடி, மே மாதத்தில் 91,957 பத்திரங்கள் பதிவாகி ரூ.298.62 கோடி, ஜூன் மாதத்தில் 2,07,678 பத்திரங்கள் பதிவாகி ரூ.654 கோடி, ஜூலை மாதத்தில் 2,03,212 பத்திரங்கள் பதிவாகி ரூ.644 கோடியாக வருவாய் இருந்தது.

அதே நேரத்தில், கடந்தாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை ரூ.3,593 கோடியாக வருவாய் இருந்தது. ஆனால், நடப்பாண்டில் ரூ.1,627 கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டை காட்டிலும் 50 சதவீதத்துக்கு மேல் வருவாய் பற்றாக்குறை என்று தெரிகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னர் பத்திரப்பதிவு சராசரியாக பதிவு செய்யப்பட்டாலும், வருவாய் என்பது சராசரியாகவே இருந்து வருகிறது.  குறிப்பாக, தினமும் 8 ஆயிரம் ஆவணங்கள் பதிவாவதே சிரமமான காரியமாக இருந்தது. ஆனால், ஒரு சில நாட்களில் மட்டும் கூடுதல் பத்திரங்கள் பதிவானது. இந்நிலையில், நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 20,307 பத்திரங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் ரூ.123.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

அதன்படி, சென்னை மண்டலத்தில் 3,604 பத்திரங்கள் பதிவாகி ரூ.48.72 கோடியும், கோவை மண்டலத்தில் 3,161 பத்திரங்கள் பதிவாகி ரூ.27.25 கோடியும், கடலூர் மண்டலத்தில் 1,387 பத்திரங்கள் பதிவாகி ரூ.3.73 கோடியும், மதுரை மண்டலத்தில் 3,348 பத்திரங்கள் பதிவாகி ரூ.11.26 கோடியும், சேலம் மண்டலத்தில் 2,323 பத்திரங்கள் பதிவாகி ரூ.10.84 கோடி, தஞ்சை மண்டலத்தில் 799 பத்திரங்கள் பதிவாகி ரூ.3.01 கோடி, நெல்லை மண்டலத்தில் 2,155 பத்திரங்கள் பதிவாகி ரூ.6.79 கோடியும், திருச்சி மண்டலத்தில் 1,681 பத்திரங்கள் பதிவாகி ரூ.6.71 கோடியும், வேலூர் மண்டலத்தில் 1,849 பத்திரங்கள் பதிவாகி ரூ.5 கோடி என மொத்தம் 20,307 பத்திரங்கள் பதிவாகி ரூ.123.35 கோடி வசூலாகியுள்ளது.

கடந்த 2018 செப்டம்பர் 12ல் 18,009 பத்திரங்களும், 2019 மார்ச் 13ல் 18,674 பத்திரங்களும், 2019 செப்டம்பர் 4ம் தேதி 18,967 பத்திரங்களும் பதிவானது. அதன்பிறகு செப்டம்பர் 14ம் தேதி 19,769ம், செப்டம்பர் 16ம் தேதி 19,681 பதிவான நிலையில், நேற்றுமுன்தினம் 20,307 பத்திரங்கள் பதிவாகியுள்ளன. இதுவே அதிகபட்சமான பத்திரப்பதிவு எனக்கூறப்படுகிறது. மேலும், இது பத்திரப்பதிவுத் துறையில் ஒரு மைல் கல்  என்று பதிவுத்துறை தலைவர் சங்கர் தெரிவித்தார்.

Tags : registrar , Unprecedented registration of 20,000 bonds in a single day in the registrar's office: 123 crore revenue
× RELATED ஆவணங்களின் எண்ணிக்கை, வருவாய்...