×

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு விவகாரம்: ஆளுநர் தாமதப்படுத்தியதால் அரசாணை வெளியிட்டோம்: பசும்பொன்னில் முதல்வர் பேட்டி

சாயல்குடி:   அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் தாமதப்படுத்தியதால், அதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையை ஒட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பசும்பொன் சென்று, நினைவிடத்தில் உள்ள தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேவர் குருபூஜை விழா, அரசு விழாவாக நடத்தப்படும் என 1979ல் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அரசு விழா நடந்து வருகிறது. 1994ல் சென்னை நந்தனத்தில் தேவருக்கு வெண்கல சிலையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறுவினார்.

தொடர்ந்து 2014ல் 13 கிலோ எடையுள்ள தங்கக்கவசத்தை வழங்கினார். மருத்துவப்படிப்பில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு  7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட முன்வடிவமாக ஏற்படுத்தி, அதனை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். மருத்துவ கவுன்சலிங் துவங்க உள்ள நிலையில், ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் தாமதப்படுத்தியதால்,  அதற்கான அரசாணையை தமிழக அரசே வெளியிட்டுள்ளது. நானும் அரசு பள்ளியில் படித்தவன்தான். அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த அரசு எப்போதும் துணையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் போராட்டம்
பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு காலை 8.45 மணிக்கு வர வேண்டிய முதல்வர், காலை 9.25 மணிக்குத்தான் வந்தார். மரியாதை செலுத்திவிட்டு முதல்வர் திரும்பும் வரை பொதுமக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்காததை கண்டித்து நினைவிடத்தின் வெளியே கூச்சல் குழப்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.


Tags : release ,government school students ,interview ,Govt ,Chief Minister , 7.5% reservation for government school students: Govt delays release of govt
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு