×

கிருஷ்ணன்கோவில் சன்னதிதெருவில் கழிவுநீர் ஓடையில் ராட்சத குடிநீர் குழாய் பதிப்பு: சாக்கடை தண்ணீர் கலக்கும் அபாயம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது முக்கடல் அணையாகும். இங்கிருந்து 3 குழாய்கள் மூலம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு சுத்தம் செய்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாநகராட்சியானதை தொடர்ந்து பல பகுதிகளில் மாநகராட்சி எல்லைக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிப்பால் முக்கடல் அணையில் உள்ள தண்ணீரால் குடிநீர் விநியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கோடைகாலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

அந்த நாட்களில் மாநகர பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் நாட்கள் 20 நாட்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இந்நிலையில் மாநகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புத்தன்அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது குடிநீர் வடிகால் வாரியம் மூலம் புத்தன்அணையில் இருந்து கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ராட்சத குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் நகர பகுதியில் சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத, சிறிய குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் மாநகர பகுதியில் உள்ள அனைத்து தெரு, சாலைகள் உடைக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

இதுபோல் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் சன்னதி தெருவில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் கழிவுநீர்ஓடை குறுக்காக செல்கிறது. கழிவுநீர் ஓடையின் மேல் பகுதியில் குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து முன்னாள் கவுன்சிலர் ராமகிருஷ்ணன் உள்பட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கழிவுநீர் செல்லும் ஓடையின்மேல் பகுதியில் குழாய் பதித்தால், கழிவுநீர் செல்ல வாய்ப்பு இல்லாமல் சாலையில் ஓடும் நிலை ஏற்படும். இதனால் கழிவுநீர் ஓடையின் கீழ் பகுதியில் குழாய் பதிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பணி கிடைப்பில் உள்ளது.

இது குறித்து முன்னாள் கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: புத்தன்அணை குடிநீர் திட்டப்பணிக்கு குழாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதியில் சாலைகள் போடாதால், கிருஷ்ணன்கோவில் பகுதி முழுவதும் அனைத்து சாலைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கிருஷ்ணன்கோவில் சன்னதி தெருவில் ராட்சத குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் கழிவுநீர் ஓடை குறுக்காக செல்கிறது. இந்த ஓடையின் மேல் பகுதியில் குழாய் பதிக்க முடிவு செய்து குழாய்கள் கொண்டுவரப்பட்டது.

ஓடையின்மேல் பகுதியில் குழாய் அமைத்தால் கழிவுநீர் சீராக செல்லவாய்ப்பு இல்லை. இதனால் ஓடையின் கீழ் பகுதியில் குழாய் அமைக்கவேண்டும் என கூறியுள்ளோம். மேலும் ஓடைபகுதியில் குடிநீருக்கு போடப்படும் குழாயில் இணைப்பு போடப்படவுள்ளது. இதனால் இணைப்பு வழியாக கழிவுநீர் குழாய்க்குள் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் குடிநீர் குழாய் கழிவுநீர் ஓடையின் கீழ் பகுதியில் அமைக்கவேண்டும் என்றார்.



Tags : sewer stream ,Sannathi Street ,Krishnanagar , Giant drinking water pipe version of the sewer stream at Sannathi Street in Krishnanagar: Risk of sewage mixing
× RELATED நாமக்கல் தொழிலதிபர் வீட்டில் ரூ.4.8 கோடி...