×

பாம்பன் பாலத்தில் மிதவை மேடை மோதியதால் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை துண்டிப்பு

ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் புதிய பாலம் தூண்கள் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மிதவை மேடை நேற்று இரவில் வீசிய காற்று நீரோட்டத்தில் இழுத்து செல்லப்பட்டு ரயில் பாலத்தில் மோதியது. இதனால் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய இருவழித்தட ரயில் பாலம் கட்டும் பணி கடந்தாண்டு துவங்கியது. கப்பல் செல்லும் கால்வாயில் தூண்கள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதற்காக கடலில் கிரேன் பொருத்திய மிதவை மேடை அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று பகலில் பணி முடிந்து ஊழியர்கள் கரை திரும்பிய நிலையில், இரவில் வீசிய பலத்த காற்றுக்கு  கயிறு அறுந்து மிதவை மேடை கடல் நீரோட்டத்தின் போக்கில் இழுத்து செல்லப்பட்டு பாம்பன் ரயில் பாலத்தில் மோதியது. கப்பல் செல்ல திறக்கும் ஷெர்ஜர் தூக்குப்பாலத்தில் இருந்து 50 அடி தொலைவில் ரயில் பாலத்தில் ஊழியர்கள் ஒதுங்கி நிற்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் பக்க மேடையில் மோதி மிதவை மேடை நின்றுவிட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு பணிக்கு வந்த ஊழியர்கள், பாலத்தில் மோதி நின்ற மிதவை மேடையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்குப்பின் மிதவைப்பாலம் மீட்கப்பட்டு, தூண்கள் கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து  ராமேஸ்வரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து வாகனம் மூலம் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். பாம்பன் பாலத்தில் மிதவை மேடை மோதிய பகுதியில் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தபின்பே பாலத்தில் மீண்டும் ரயில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : collision ,Rameswaram ,Pamban Bridge , Rail service to Rameswaram disrupted due to collision with floating platform at Pamban Bridge
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...