×

மஞ்சி விலை குறைவால் உற்பத்தியாளர்கள் வேதனை; மட்டைகள் தேக்கமடையும் அவலம்

பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதான விவசாய தொழிலாக உள்ளது. தென்னை சார்ந்த உற்பத்தி பொருளான மஞ்சி  சுமார் 80 சதவீதம் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  தென்னை மட்டையிலிருந்து மஞ்சி பிரித்தெடுத்து உலர வைக்கும் 550க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் தென்னை மஞ்சானது  ஹைதரபாத், கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி பிரான்ஸ், கொரியா, இங்கிலாந்து சீனா, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தினமும் 2 ஆயிரம் டன் வரையிலும்  ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் பெரும்பாலும், சீனாவுக்கு  மஞ்சி மற்றும் மஞ்சி துகள் கட்டிகளின் ஏற்றுமதி அதிகமாகவே உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் துவக்கத்திலிருந்து சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் சுற்றுவட்டாரத்தில் உள்ள தென்னை தொழிற்சாலைகளில் இருந்து, தென்னை மஞ்சி மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் அனைத்தும், முதற்கட்டமாக சீனாவுக்கு அனுப்புவது தடை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, நெதர்லாந்த், பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் நார் ஏற்றுமதி தொடர்ந்து தடைபட்டது.

இதனால் மஞ்சி  தொழிற்சாலைகளில்,  மே மாதம் வரையிலும்  டன் கணக்கில் நார் தேக்கமடைந்ததுடன், சில மாதங்களிலே சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரையிலும் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜூன் மாதம் முதல் சீனாவில் பெருமளவு சகஜ நிலை திரும்பியதையடுத்து, பொள்ளாச்சி மற்றும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மீண்டும் வெளி நாடுகளுக்கு தென்னை மஞ்சி ஏற்றுமதி அதிகரிக்க துவங்கியது. ஆனால், இந்த மாதம் துவக்கத்திலிருந்து சீனாவுக்கு அனுப்பப்படும் மஞ்சியின் விலை குறைவானதாக கூறப்படுகிறது. இதனால், தென்னை மஞ்சி உற்பத்தியார்கள் உரிய விலையில்லாமல் வேதனையடைகின்றனர். மேலும், பல தொழிற்சாலைகளில், மஞ்சி உற்பத்தி குறைந்து, மட்டைகள் தேக்கமடைந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவை மாவட்ட தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்க துணை தலைவர்  சுதாகர் கூறுகையில், ‘பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து  டன் கணக்கில், வெளி நாடுகளுக்கு மஞ்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது.  சீனாவில்  கொரோனா காரணமாக, அந்த நாட்டிற்கு பல மாதமாக மஞ்சி  ஏற்றுமதி தடைபட்டது.  இதனால் அந்நேரத்தில்,  வர்த்தகம் பெரிதும்  பாதிக்கப்பட்டது. கொரோனா தளர்வு காரணமாக தற்போது, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து வெளி மாநிலங்களுக்கும். சீனா உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மஞ்சி ஏற்றுமதி நடைபெறுகிறது. அதிலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் தினமும் 2500டன் அளவிலான மஞ்சி வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பருவ மழை குறைந்து, தற்போது மீண்டும் வெயிலின் தாக்கத்தால், தொழிற்சாலைகளில் தென்னை நார் உற்பத்தி அதிகரிப்பதுடன், வெளியிடங்களுக்கு ஏற்றுமதியும் அதிகமானது. மேலும், கடந்த மாதத்தில் ஒரு கிலோ மஞ்சி கிலோ ரூ.17 வரையிலும் விலைபோனது. ஆனால், இந்த மாதம் துவக்கத்திலிருந்து ஒரு கிலோ மஞ்சி அதிகபட்சமாக ரூ.13வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் குறைவான விலைக்கு மஞ்சி வாங்க முன்வருவதால்,  மஞ்சி உற்பத்தியாளர்கள் உரிய லாபம் கிடைக்காமல் தவிக்கின்றனர். மாவட்டம் முழுவதும் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட கன்டெய்னர்  மூலம் வெளி நாடுகளுக்கு நார் ஏற்றுமதி செய்யப்படுவது இருந்தாலும், ஒரு கிலோவுக்கு 4 ரூபாய் வரை மஞ்சி விலை குறைந்துள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது. இதனால், பல தொழிற்சாலைகளில் மஞ்சி உற்பத்திக்காக குவித்து போடப்பட்டுள்ள தென்னை மட்டைகள் தேக்கமடைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், மீண்டும் தொழில் நஷ்டமடையும் நிலை ஏற்படும்’  என்றார்.

Tags : Manufacturers , Manufacturers suffer as mango prices fall; It’s a shame the bats are stagnant
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல் அனைத்து...