×

பிரான்ஸ் கத்தி குத்து சம்பவத்திற்கு ஆதரவாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் பதிவிட்ட கருத்தை நீக்கியது டுவிட்டர் நிறுவனம்.!!!

கொலாலம்பூர்: பிரான்ஸ் நாட்டில் தேவாலயத்தின் அருகே நடந்த கத்தி குத்து சம்பவம் தொடர்பாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.  பிரான்சில் தலைநகர் பாரீசில் உள்ள பள்ளியொன்றில் வரலாற்று ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பாட்டீ. இவர் வகுப்பறையில் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் படத்தை மாணவர்களிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் கடந்த 21ம் தேதி, செசன்யா நாட்டை சேர்ந்த அப்துல்லா அன்சரோவ் என்பவனால் குத்தி கொலை செய்யப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டார்.

இச்சம்பவம் நடந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், நைஸ் நகரில் உள்ள நோட்ரே டாம் தேவாலயத்தின் அருகே நேற்று நடத்தப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் பெண் ஒருவர் உள்பட 3 பேர் பலியாகினர். இதில் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க சென்ற பலரும் காயமடைந்தனர். வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடியின் செயலுக்கு தண்டனை கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக தீவிரவாதி தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்து தீவிரவாத தடுப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தாக்குதல் நடத்தியவன் 20 வயதான துனிசியா நாட்டைச் சேர்ந்த இளைஞன். அவன் தாக்குதல் நடத்த தேவாலயத்திற்குள் நுழையும் போது அவனது கையில் குர்ஆன் புத்தகம் மற்றும் கையில் கத்தியும் வைத்திருந்தான் என்றார்.

இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டில் தேவாலயத்தின் அருகே நடந்த கத்தி குத்து சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது பதிவிட்ட கருத்தில், பிரான்ஸ் மக்களை தண்டிக்கும் உரிமை முஸ்லீம்களுக்கு உண்டு. பிரான்ஸ் அரசு, மற்ற மதத்தினரின் உணர்வுகளை மதிக்குமாறு தனது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த டுவிட்டர் பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. பிரான்ஸ் தேவாலயத்தில் 3 பேர் குத்திக் கொலை செய்த சம்பவத்திற்கு மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது வரவேற்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Mahathir ,Malaysian ,stabbing ,French , Twitter deletes comment posted by former Malaysian PM in support of France stabbing incident. !!!
× RELATED மலேசியாவில் இருந்து தமிழக...