தசரா திருவிழா நிறைவை தொடர்ந்து குலசேகரன்பட்டினத்தில் 2வது நாளாக குவிந்த பக்தர்கள்; சமூக விலகல் மாயம்

உடன்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நிறைவடைந்ததையடுத்து 2வது  நாளாக நேற்றும் பக்தர்கள் குவிந்தனர். பலர் மாஸ்க் அணியாததோடு சமூக விலகலை மறந்தனர். உலக அளவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசராவுக்கு புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்தாண்டுக்கான தசரா திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் நடந்தது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கொடியேற்றம் நடந்த முதல்நாள், சூரசம்ஹாரம் நடந்த 10ம் நாள், கொடியிறக்கம், காப்பு அவிழ்த்தல் நடந்த 11ம் திருநாள் ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் கோயிலுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டு விழா நிகழ்வுகள்  நடந்தேறின. இருப்பினும் 2ம் திருநாள் முதல் 9ம் திருநாள் வரை தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் பதிவுசெய்த பக்தர்களில் 8 ஆயிரம் பேர் தரிசித்து சென்றனர்.

தற்போது தசரா திருவிழா நிறைவுபெற்றதை அடுத்து கடந்த 28ம்தேதி முதல் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினமே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதே போல் 2வது நாளாக நேற்றும் குலசேகரன்பட்டினத்தில் அம்மனை தரிசிக்க பக்தர்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர். குறிப்பாக சிகப்பு ஆடை உடுத்திய பக்தர்கள் ஜெய் காளி, ஓம் காளி கோஷங்கள் முழங்க நீண்ட வரிசையில் நின்றும், பிரகார மண்டபத்தில் நின்றும் அம்மனை தரிசித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் முகக்கவசம் அணியாததோடு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மறந்தனர். எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகமும்,   அறநிலையத்துறை  மற்றும் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்படுத்த முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்வீட் ஸ்டாலில் குவியும் கூட்டம்

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தில் கலந்து கொள்ளுபவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் போது குலசேகரன்பட்டினம், உடன்குடி, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, திருச்செந்தூர், சாத்தான்குளம், நாசரேத்  உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு பகலாக திறந்து இருக்கும் சுவீட் ஸ்டால்களில் இனிப்பு பலகாரங்களை வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சூரசம்ஹாரத்திற்கு பக்தர்கள் யாருக்கும் அனுமதிக்கப்படாததால் எந்த கடைகளும் இரவு, பகலாக திறக்கப்படவில்லை. தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வருவதால் கோயில் வளாகத்திற்குள்ளேயே ஸ்வீட் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளதையடுத்து பக்தர்கள் தங்களுக்கு தேவையான ஸ்வீட்களை வாங்கிச்  செல்கின்றனர்.

Related Stories:

>