×

வெளிமாவட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க எதிர்ப்பு: 15 மீனவ கிராமத்தினர் தொடர் வேலை நிறுத்தம்: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

வேதாரண்யம்: கோடியக்கரையில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து வேதாரண்யம் பகுதியில் 15 மீனவ கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலம். இந்த காலகட்டத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் இப்பகுதிகளுக்கு வந்து தங்கி மீன்பிடி தொழில்  செய்வது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாவட்ட மீனவர்கள் குடும்பத்துடன் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதனால் தங்கள் தொழில் பாதிப்பு ஏற்படுவதாக கூறி வேதாரண்யம் பகுதி  மீனவர்கள் மனு அளித்தனர்.

இது குறித்து வேதாரண்யம் தாசில்தார் முருகு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எந்தமுடிவும் கிடைக்கவில்லை. இதனால், வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், மணியன்தீவு, வணவன்மகாதேவி  உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மீனவ கிராம பிரதிநிதிகள் ஒன்று கூடி இதற்கான முடிவு எடுக்கப்படும் வரை சுமார் 10,000 மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.  இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Outstation fishermen ,protest ,fishing villagers , Outstation fishermen stay and protest: 15 fishing villagers go on strike: 10 thousand people participate
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...