×

திருச்சியில் பெரும் பரபரப்பு: 6 கோடி கேட்டு தொழிலதிபர் மகனை காரில் கடத்திய கும்பல்: 5 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்

திருச்சி: திருச்சியில் தொழிலதிபரின் 12 வயது மகனை காரில் கடத்தி 6 கோடி கேட்டு பேரம் பேசி மிரட்டிய மர்ம கும்பல், போலீசை கண்டதும் காரிலேயே சிறுவனை விட்டுவிட்டு தப்பிச்சென்றது. திருச்சி கன்டோன்மென்ட் வார்னர்ஸ்ரோட்டை  சேர்ந்தவர் கண்ணப்பன். தொழிலதிபர்.  இவரது மகன்  முத்தையா (12). நேற்றுமுன்தினம்  மாலை 5.30 மணியளவில் வீட்டு வாசலில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீட்டுக்குள் வராததால்  சந்தேகமடைந்த பெற்றோர் வெளியே வந்து தேடினர். அப்போது கண்ணப்பனுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், ‘‘உங்களது மகனை கடத்தியுள்ளோம். ₹6 கோடி தந்தால் விட்டுவிடுகிறோம்’’ என்று கூறினார். இதையடுத்து  அதிர்ச்சி  அடைந்த கண்ணப்பன் அவ்வளவு பணம் இல்லை என்றும், மகனை விட்டுவிடும்படியும் கெஞ்சியுள்ளார். இறுதியாக 2 கோடி கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணப்பன் இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் வழிகாட்டுதல்படி மர்ம நபர்கள் போன் செய்யும்போதெல்லாம் அவர்களிடம் கண்ணப்பன் பேசிவந்தார். இரவு 10 மணி அளவில்  மர்ம நபர்கள் பேசிய போன்கால் வந்த இடம் உறையூர் ராமலிங்க நகர் 2வது குறுக்கு தெரு என சிக்னலில் தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் ராமலிங்க நகர் செக்போஸ்ட்டை அடைத்துவிட்டு அங்கு சென்றபோது, மர்ம நபர்கள் சிறுவனை  காரிலேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து 10.30 மணி அளவில் சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றினர்.

இதுபற்றி சிறுவனிடம் போலீசார் விசாரித்தபோது, காரில் வந்த 3 பேர், அப்பாவின் நண்பர்கள் என்று கூறி அழைத்து சென்றதாகவும், தன்னை அடிக்கவில்லை. திட்டவில்லை. நல்லபடியாக நடத்தினார்கள் என்றும் தெரிவித்தான். பதிவெண்ணை  வைத்து விசாரித்தபோது, அதன் உரிமையாளர் ரங்கத்தை ேசர்ந்த ஜீவானந்தம் என தெரியவந்தது. அவர் நண்பர் ஒருவர் வாடகைக்கு வேண்டும் என கூறி வாங்கிச்சென்றதாக கூறியுள்ளார். அவர் யார் என போலீசார் விசாரித்து  வருகின்றனர். திருச்சியில்  சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Tags : Trichy ,Businessman , Trichy: Businessman's son abducted in car for Rs 6 crore: Police recover at 5 p.m.
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...