×

118 கோடி மதிப்பில் 1.10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: ஆயிரத்து 143 குக்கிராமங்களில் உள்ள 1,10,288 வீடுகளுக்கு 118 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.  இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் சென்னை மாவட்டம், கிண்டி வட்டம், நந்தனத்தில் 73 கோடியே 17 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை கட்டிடம், 4 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ராஜபாளையம் மற்றும் பழனியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் மதுரை  ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள 3 மின்தூக்கிகள் என மொத்தம் 77 கோடியே 24 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வணிகவரி மற்றும் பதிவுத்துறை கட்டிடங்கள் மற்றும் மின்தூக்கிகளை  காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதேபோல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சேலம்  மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலமாக ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 118 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 64 ஊராட்சிகளுக்குட்பட்ட 1,143 குக்கிராமங்களில் உள்ள 1,10,288 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும்  திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், 2021-22ம் நிதியாண்டில் 173 கிராம ஊரட்சிகளுக்குட்பட்ட 1,779 குக்கிராமங்களில் உள்ள 1,90,079 வீடுகளுக்கும், 2022-23ம் நிதியாண்டில் 138 கிராம ஊரட்சிகளுக்குட்பட்ட 1,538 குக்கிராமங்களில் உள்ள 1,83,733  வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம், மொத்தம் மூன்றாண்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்படாத 5,71,683 வீடுகளுக்கும் 2022-23ம் நிதியாண்டிற்குள் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், சேலம், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல்,  திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 25 இடங்களில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள சுற்றுப்புற காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களை திறந்து  வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : households ,Chief Minister , 118 crore worth 1.10 lakh households drinking water connection project: Chief Minister started
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...