×

தியானம் எனக்கு உதவியது…: சூர்யகுமார் உற்சாகம்

ஐபிஎல் தொடரின் 13வது சீசனில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிப்பதுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் உறுதி செய்துவிட்டது. ராயல் சேலஞ்சர்சுடன் நேற்று முன் தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. அந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச… ஆர்சிபி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. தொடக்க வீரர்கள் பிலிப் 33 ரன், படிக்கல் 74 ரன் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். மும்பை பந்துவீச்சில் பூம்ரா 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து வென்றது. டி காக் 18, இஷான் 25, ஹர்திக் 17, குருணல் 10 ரன் எடுத்தனர். அபாரமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 79 ரன் (43 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.இது குறித்து சூர்யகுமார் கூறியதாவது: இறுதி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதை எப்படி நடத்திக் காட்டுவது என்று சிந்திப்பதும் வழக்கம். எனது ஆட்டத் திறனை முழுமையாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப களத்தில் ஷாட்களை விளையாட வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துள்ளேன். தியானம் செய்வதும், உடல்தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியும் களத்தில் எனக்கு வெகுவாக உதவின. சாஹலின் சுழல் மற்றும் ஸ்டெயினின் வேகப் பந்துவீச்சை சமாளித்து ரன் குவித்தது திருப்தி அளிக்கிறது.

ஊரடங்கு சமயத்தில் பேட்டிங்கை மேம்படுத்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராகக் களமிறங்கவே விரும்புகிறேன். அதே சமயம், போட்டியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதனால் தான் இந்த ஆட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்துள்ளது.இவ்வாறு சூர்யகுமார் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாததால் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், அவர் மும்பை இந்தியன்சுக்காக சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மும்பை அணி, எஞ்சியுள்ள தனது 2 லீக் ஆட்டங்களில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளை சந்திக்க உள்ளது.

Tags : Suryakumar Enthusiasm , Meditation helped me…: Suryakumar Enthusiasm
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...