சரியாக இரவு 9 மணிக்கு இந்தியா தாக்குதல் நடத்தும் என்றதும் தளபதி பஜ்வாவின் கால்கள் நடுங்கின உடல் எல்லாம் வியர்த்து கொட்டியது: அபிநந்தன் விடுதலை பற்றி பாக். எம்பி பரபரப்பு தகவல்

இஸ்லாமாபாத்: இந்திய போர் விமானி அபிநந்தனை விடுவிப்பதற்காக இரவு 9 மணிக்கு இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி கூறியதும், அந்நாட்டு ராணுவ தளபதி பஜ்வாவின் கால்கள் நடுங்கி, உடல் முழுவதும் வியர்த்து கொட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக பிப்ரவரி 26ம் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, பாலகோட்டில் இருந்த தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை குண்டு வீசி அழித்தன. இதன் எதிரொலியாக பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவின. அவற்றை இந்திய விமானப்படை விரட்டியது.

அப்போது, தமிழகத்தை சேர்ந்த போர் விமானி அபிநந்தன் இயக்கிய விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அபிநந்தனை அந்நாட்டு ராணுவம் கைதியாக பிடித்தது. அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என இந்தியா எச்சரித்தது. மேலும், சர்வதேச அளவிலும் அழுத்தம் கொடுத்தது.  இதைத் தொடர்ந்து,  அதே ஆண்டு மார்ச் 1ம் தேதி அவரை இந்தியாவிடம்  பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்தது. இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம், ‘பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்)’ கட்சியின் தலைவர் சர்தார் அயாஸ் சாதிக் பேசியபோது, அபிநந்தனை பாகிஸ்தான் அரசு எப்படி விடுவித்தது என்பதற்கான பின்னணியை  அவர் பேசுகையில், ‘‘பாகிஸ்தானிடம் சிக்கிய  அபிநந்தனை விடுவிக்கும்படி இந்தியா எச்சரித்தது. அது பற்றி ஆலோசிக்க உயர்நிலை  கூட்டம் நடைபெற்றது.

இதில், பிரதமர் இம்ரான்கான் கலந்து கொள்ள மறுத்து  விட்டார். ராணுவ தளபதி உமர் ஜாதவ் பாஜ்வா கூட்டத்துக்கு வந்தபோது, அவருடைய கால்கள் நடுங்கின. உடல் எல்லாம் வியர்த்து கொட்டியது. அவர் மிகவும் பதற்றமாக இருந்தார். கூட்டத்தில் பேசிய  வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி , ‘அபிநந்தனை நாம் விடுவிக்காவிட்டால், பாகிஸ்தான் மீது இன்று  இரவு 9 மணிக்கு இந்தியா தாக்குதல் நடத்த உள்ளது. ஆகவே, கடவுளின் செயலாக கருதி,  அவரை விடுதலை செய்து விடலாம்,’ என்றார்.  இதைத் தொடர்ந்தே, அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்,’’ என்றார். அவருடைய பேச்சு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.

‘புல்வாமா தாக்குதலை நடத்தியது பாக். தான்’

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் பவாத் சவுத்ரி நேற்று பேசுகையில், “இந்தியாவை அவர்கள் இடத்திற்கே சென்று தாக்குதல் நடத்தி உள்ளோம். புல்வாமா தாக்குதல் வெற்றியானது பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நமது நாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும். நீங்கள், நான் என அனைவருக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு,” என்றார். இம்ரான் கானின் நெருங்கிய நண்பரான பாவத் சவுத்ரி, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதாவது தெரிகிறதா?

பாகிஸ்தான்  எம்பி.யின் பேச்சை மேற்கோள்காட்டி, பாஜ தலைவர் ஜே.பி.நட்டா நேற்று  வெளியிட்டுள்ள டிவிட்டர் வீடியோ பதிவில், ‘இந்தியா செய்யும் எதையும் ராகுல்  நம்பவில்லை. அது, நமது ராணுவமாக இருக்கட்டும், அரசாங்கம், நமது குடிமக்கள் என எதையும் நம்ப மாட்டார். அவருடைய மிகுந்த நம்பிக்கைக்குரிய  தேசமான பாகிஸ்தானில் இருந்து இப்போது ஒரு தகவல் வந்திருக்கிறது. இப்போது,  ராகுல் சிறிது வெளிச்சத்தை காண்பார் என நம்புகிறேன். காங்கிரசும், அதன்  தலைவர்களும் ராணுவத்தை கேலி செய்தனர். அவர்களின் வீரம் குறித்து கேள்வி  எழுப்பினர். ஆனால், நாட்டு மக்கள் இதற்காக காங்கிரசை  தண்டித்துள்ளனர்,’ என கூறியுள்ளார்.

Related Stories:

>