ஆன்லைன் வகுப்பு புரியாததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை

பெரம்பூர்: சென்னை திருவிக நகர் தீட்டி தோட்டம் முதல் தெருவை சேர்ந்தவர் ஹேமந்குமார். நீதிமன்ற ஊழியர். இவரது மனைவி சண்முகப்பிரியா. தம்பதியின் மகன் மாதவன் (17), பிளஸ் 2 படித்து வந்தான். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் இயங்காததால், ஆன்லைன் மூலம் தினமும் பாடம் கற்று வந்தான்.கடந்த சில நாட்களாக ஆன்லைன் வகுப்பில் படங்கள் புரியவில்லை, என மாதவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். ஆனால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வேறு வழியில்லை. அடுத்த வருடம் கல்லூரியில் சேர வேண்டும் என்பதால், ஆன்லைன் வகுப்பு மூலம் பிளஸ் 2 படித்துதான் ஆக வேண்டும், என பெற்றோர் கூறியுள்ளனர்.

இதனால், மன உளைச்சலில் இருந்த மாதவன், நேற்று மாலை 5 மணியளவில் தனது அறையில் தூக்கில் தொங்கினார். மகன் அறையில் இருந்து நீண்ட நேரம் வெளியில் வராததால், அவனது தாய் உள்ளே சென்றுள்ளார்.அங்கு, மகன் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி துடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு பெரியார் நகர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, மாதவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த திருவிக நகர் போலீசார், மாதவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>