தாழம்பூர் - நாவலூர் இடையே ஒருநாள் மழைக்கே குண்டும் குழியுமான சாலை: அதிகாரிகளின் அலட்சியத்தால் அவலம்

திருப்போரூர்: சென்னை அடுத்த நாவலூரை ஒட்டி தாழம்பூர், சிறுசேரி, காரணை, பொன்மார், போலச்சேரி, புதுப்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன. புறநகர் பகுதியதக உள்ளதால், இங்கு ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், வீட்டு மனைப் பிரிவுகள் உருவாகி இப்பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது.

மேலும் இந்த சாலையில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, பள்ளிகள் ஆகியவை உள்ளன. நாவலூரில் இருந்து தாழம்பூர் வழியாக செல்வதற்கு இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போட்டப்பட்டது.

ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டுமானப்பணி நடைபெறுவதால் தினமும் மணல், செங்கல், தண்ணீர், கழிவுநீர் ஆகிய லாரிகள் இவ்வழியாக செல்கின்றன. மேலும், இக்கிராமங்களில் குடியிருப்போர் சென்னை செல்வதற்கும், சிறுசேரி சிப்காட் செல்வதற்கும் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.அதிக வாகன போக்குவரத்தால் இச்சாலையில், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது, கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது. இதில், வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் இந்த சாலை இருந்தாலும், அதனை முறையாக பராமரிக்க சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் யாரும் எட்டிப் பார்ப்பது இல்லை என பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் சிலரும், இச்சாலையில் உள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் மென்பொருள் நிறுவனங்களும் இணைந்து தங்கள் சொந்த செலவில் ஜல்லி, கட்டிடக் கழிவுகளால், பள்ளங்களை அவ்வப்போது சீரமைக்கின்றனர். ஆனாலும், நிரந்தர தீர்வு இல்லாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், இச்சாலையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நாவலூர் - தாழம்பூர் இடையே அமைந்துள்ள இச்சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

குளம்போல் தேங்கிய மழைநீர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று மதியம் வரை சாரல் மழை பெய்ததால், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை பெரியார் நகர் பிரதான சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் வரதராஜ பெருமாள் கோயில் வடக்கு மாடவீதி, கோனேரிக்குப்பம் ஏனாத்தூர் சாலை, ரங்கசாமி குளம், விளக்கடி கோயில் தெரு, மேட்டுத்தெரு, செட்டித் தெரு, காமராஜர் சாலை பஸ் நிலையம் அருகில், ரெட்டை மண்டபம் பகுதி உள்பட பல  பகுதிகளில் சரியான வடிகால் வசதி இல்லாததால், சிறுமழைக்கே தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சிறுமழைக்கே தண்ணீர் தேங்கினால் பெருமழையை எப்படி சமாளிப்பது என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இதனை எச்சரிக்கையாக கருதி அதிக மழை வருவதற்குள் உடனடியாக கால்வாய் அடைப்புகளை நீக்கி, முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>