×

உயிர்காக்கும் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைக்கு 100 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் திருமணி கிராமத்தில் கடந்த 2012 மார்ச் மாதம், மத்திய அரசு சார்பில், எச்பிஎல் நிறுவனம் மூலம் உயிர்காக்கும் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.  இதற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான  அமைச்சரவை குழு “தேசிய  முக்கியத்துவ திட்டம்” என ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து 100 ஏக்கர் பரப்பளவில் தடுப்பூசி தொழிற்சாலை  அமைக்கப்பட்டது.இங்கு தட்டம்மை,  ரூபெல்லா,  ஹெபடைடிஸ்  பி, ஹீமோபிலஸ்  இன்ப்ளூயன்ஸா வகை. ரேபிஸ்  தடுப்பூசி உள்பட பல்வேறு உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்கும் வகையில் உள்கட்டமைப்புகள் அமைத்து, அதற்கான ஆய்வு தளவாடங்கள் அனைத்தும் நிறுவி, தடுப்பூசிகள் தயாரிக்க தயார் நிலையில் உள்ளது. இதில் பயோடெக்னாலாஜி  பயின்ற வல்லுநர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.இத்திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட திட்ட மதிப்பீடு 594 கோடி என இலக்கு  நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதனை செயல்படுத்துவதில்  காலதாமதம் ஆனதால், கடந்த 2017ம் ஆண்டு 710 கோடியாகவும்,  2018ம் ஆண்டில் 904.33 கோடியாகவும் அதிகரித்தது. மீண்டும் திருத்தப்பட்டு 904.33 கோடியாக திட்டச் செலவு விரிவாக்க அறிக்கையை 2019ம் ஆண்டு சமர்ப்பித்தது. ஆனால், நிதி அமைச்சகம் திட்டத்தின்  முன்மொழிவு சாத்தியமில்லை  எனக்கூறி நிதி ஒதுக்காமல்,  நிராகரித்ததாக  கூறப்படுகிறது

இதனால்,   நிறுவனத்தில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழக்கும் நிலை உள்ளது. மேலும் 18 மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.உயிர்காக்கும் தடுப்பூசி மருந்து தயாரிக்க தயார்  நிலையில் உள்ள எச்எல்எல் நிறுவனத்தில், உற்பத்தியை தொடங்குவதற்கு 100 கோடி உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். பன்னாட்டு கம்பனிகளுக்கு கொள்ளை லாபம் சேர்க்க அனைத்து முயற்சிகளையும் செய்யும் மத்திய அரசு, அரசு நிறுவனமான எச்எல்எல் நிறுவனத்தை சீர்குலைப்பதை கைவிடவேண்டும். நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சி அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கு 18 மாதங்களாக சம்பளம் வழங்காமல், அவர்களை தனியார் நிறுவனங்களை நோக்கி தள்ளுவதை கைவிட வேண்டும். தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்த 10 ஆயிரத்து 55 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் தமிழக அரசு 100 கோடி நிதி ஒதுக்கி  ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் செங்கல்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிஐடியு மாநில துைணப் பொது செயலாளா்  எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். திமுக எம்பி செல்வம், திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் இ.சங்கர்,  ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் பிரமிளா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிஐடியு மாநில செயலாளர் இ.முத்துக்குமார் நன்றி கூறினார்.




Tags : protest ,CITU , 100 crore funding for life-saving vaccine manufacturing plant: CITU protest
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...