×

முழு கொள்ளளவை எட்டியதால் சுருட்டபள்ளி அணை நீர் திறப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் கனமழையால் சுருட்டபள்ளி அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடர்ந்து பிற்பகல் 1 மணி வரை மழை பெய்தது. இதேபோல், ஆந்திர பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம்  நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் சின்னாப்பட்டு, காரணி வழியாக சுருட்டபள்ளி அணைக்கட்டுக்கு வந்தது.  

பின்னர், இங்குள்ள அணைக்கட்டில் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்த அணை நிரம்பி, உபரி நீர் வெளியேறியதால் நேற்று காலை 11 மணிக்கு ஊத்துக்கோட்டையில் 914 ஏக்கர் கொண்ட பெரிய ஏரியான ஈசா ஏரிக்கு  வினாடிக்கு 237 கன அடி வீதம் தமிழக-ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்டது.  இந்த தண்ணீர் ஊத்துக்கோட்டை ஏரி நிரம்பியதும் அங்கிருந்து 14 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மழை தொடர்ந்து பெய்தால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கப்படும் என தெரிகிறது. 


Tags : Suruttapalli Dam ,water opening , Because it has reached full capacity Suruttapalli Dam Water Opening
× RELATED தமிழ்நாட்டுக்கு 22,800 காவிரி நீர்...