×

7.5% உள்ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தர கவர்னர் தாமதம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு: மருத்துவப்படிப்பில் இந்த ஆண்டே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ - மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் அனுமதிதர காலதாமதம் செய்வதால், அரசாணையை தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்டது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதனால் தமிழகத்திலும் மருத்துவ கல்லூரியில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் குறிப்பாக அரசு பள்ளியில் படித்து 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ - மாணவிகள் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத பரிதாப நிலை உள்ளது. கிராமப்புறங்களில் நீட் கோச்சிங் சென்டர் இல்லாததால் அரசு பள்ளியில் படித்த மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும், மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை.

பள்ளிகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் கட்ஆப் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் விரும்பிய கல்லூரியை தேர்வு செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதனால், ஏழை மாணவர்களின் மருத்துவ கல்லூரி கனவு நிறைவேறாததால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 13 மாணவ - மாணவிகள் தற்கொலை செய்த சம்பவமும் நடந்தது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் மத்திய பாஜ அரசு இதில் உறுதியாக உள்ளது. இதையடுத்து, அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ - மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. 40 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ளார். இது சம்பந்தமான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

தமிழக அமைச்சர்கள் 5 பேர் குழுவாக சென்று கவர்னரை சந்தித்து மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது, 3 அல்லது 4 வாரத்தில் நல்ல முடிவை அறிவிப்பதாக கவர்னர் அறிவித்தார். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு, உடனடியாக 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை ஆகிய கட்சிகளும் கவர்னருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். ஆனாலும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்டத்துக்கு அனுமதி அளிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வந்தார்.
தமிழகத்தில் விரைவில் மருத்துவ படிப்பிற்கான கவுன்சலிங் நடத்தப்பட வேண்டும். ஆனாலும், தமிழக கவர்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்த பிறகே தமிழகத்தில் மருத்துவ கவுன்சலிங் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்தனர். அரசு பள்ளி மாணவர்களும் உள்ஒதுக்கீடுக்கு அனுமதி கிடைக்குமா, மருத்துவ கனவு நிறைவேறுமா என்ற அச்சத்தில் இருந்தனர்.
 
இந்நிலையில், தமிழக அரசு நேற்று இரவு ஒரு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிட-பழங்குடியினர் நல பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகியவற்றில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படித்து நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற வகை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அரசு ஒரு ஆணையம் அமைத்தது. அந்த ஆணையம் விரிவாக ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் அனைத்து மருத்துவ கல்லூரி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கையில் ஒரேவிதமான சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொருளாதாரத்தில் மிக குறைந்த நிலையில் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினமாக இருந்தது. அறிவாற்றல் அதிகமாக இருந்தாலும் சமூக பொருளாதார அடிப்படையிலும், பெற்றோர் கல்வி அறிவு இல்லாதவர்களாகவும் உள்ள நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தரத்தை உயர்த்துவது அரசின் கடமையாகும்.

நீட் தேர்வில் வெற்றிபெற்று இருந்தாலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்குமான மதிப்பெண் வேறுபாடு அதிகமாக உள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை மாநில அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சேர்க்கையில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்டு, தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவ - மாணவிகளுக்கு 7.5 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

சமமான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரை அடிப்படையில் சிறப்பு சட்டத்தை இயற்றவும் அரசு முடிவு செய்தது. அதன்படி, நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 2019-2020ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கான தமிழக அரசாணையை பிறப்பித்துள்ளது. இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  இந்த அரசாணையால் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு இந்த ஆண்டே இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

சட்டம் தேவையில்லை அரசாணையே போதும்
மூத்த வக்கீல் பி.வில்சன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், ‘‘மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமை வழங்குவது என்பது சாதி ரீதியான இட ஒதுக்கீடோ அல்லது உள் ஒதுக்கீடோ இல்லை. ஒரே மதிப்பெண்களை இரு மாணவர்கள் பெறும்பட்சத்தில் அதில் அரசு பள்ளி மாணவருக்கு முன்னுரிமை வழங்குவதுதான் இந்த அரசாணை. அரசியலமைப்பு பிரிவு 162ன் கீழ் அரசாணை பிறப்பிக்க முடியும். அதில் ஆளுநர் கையொப்பமிட வேண்டும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க சட்டம் தேவையில்லை அரசாணை பிறப்பித்தாலே போதுமானது. இதை நான் பல முறை பேட்டிகளில் வலியுறுத்தியுள்ளேன். இப்போதுதான் மாநில அரசு அதை செயல்படுத்தியுள்ளது’’ என்றார்.

மனசாட்சிப்படி ஆளுநர் நல்ல முடிவெடுக்க வேண்டும்: நீதிபதிகள் கருத்து
மதுரை மாவட்டம், திருமங்கலம் அச்சம்பட்டியைச் சேர்ந்த டாக்டர் ராமகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்காத நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மீண்டும் விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர்,  ‘‘ கூடுதல் கால அவகாசம் கேட்பது தேவையற்றது. 2017 முதல் 2020 வரையில் அரசு பள்ளி மாணவர்கள் 14 பேர் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டில் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்’’ என்றனர். இதற்கு அரசு தரப்பில், ‘‘சுமார் 500 பேர் வரையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘உள் இட ஒதுக்கீடு இந்த ஆண்டே அமலானால், சுமார் 300 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்குமே’’ என்றனர். பின்னர், ‘‘விதி 361ன் படி ஆளுநருக்கு உத்தரவிடவோ, கேள்வி எழுப்பவோ நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. ஆனால் விதி 200ன் படி ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவை மனதில் கொண்டு, மனசாட்சிப்படி நல்ல முடிவை அவர் எடுக்க வேண்டும். 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது’’ எனக் கூறிய நீதிபதிகள் விசாரணையை நவ. 2க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Governor ,Govt , Governor delays approval of 7.5% quota: Govt announces Government of Tamil Nadu
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...