×

மப்பேட்டில் ரூ100 கோடிக்கு குத்தகையாக எடுத்த 125 ஏக்கர் நிலத்தில் உலர் துறைமுக திட்டம் தொடங்கப்படுமா?

திருவள்ளூர்: மப்பேட்டில் ரூ.100 கோடிக்கு குத்தகையாக பெற்ற 125 ஏக்கர் நிலத்தில் உலர் துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர். சென்னை துறைமுகத்துக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எதிர்கால வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொண்டும், திருவள்ளூர் அடுத்த மப்பேடு கிராமத்தில், ‘ராஜிவ் காந்தி உலர் துறைமுகம்’ அமைக்க, 2010ல் அப்போதைய மத்திய கப்பல் துறை அமைச்சகம் முடிவு எடுத்தது.பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை துறைமுகத்தில் குறைந்தளவே நிலப்பரப்பு இருப்பதால், ஒருங்கிணைந்த உலர் துறைமுகம் அமைத்தல் மற்றும் பன்மாதிரி போக்குவரத்து மையம் மப்பேடு ஊராட்சியில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக தமிழக அரசு (சிப்காட் நிறுவனம்) 125 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு முதல்கட்டமாக ரூ.100 கோடியே 7 லட்சத்து 35 ஆயிரத்திற்கான காசோலை, அப்போதைய சிப்காட் நிறுவன செயல் இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரனிடம் வழங்கப்பட்டது. சென்னை துறைமுகத்தை போலவே உலர் துறைமுகத்திலும், சரக்கு பெட்டகம் அனுப்புவதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்படும். அதையடுத்து அங்கிருந்து எடுத்து வரப்படும் சரக்கு பெட்டகங்கள் நேரடியாக கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, மப்பேடு கிராமத்தில், ‘சிப்காட்’ வசமிருந்த, 125.17 ஏக்கர் நிலத்தை, 99 ஆண்டு குத்தகைக்கு, ரூ.100 கோடி கொடுத்து, 2010, செப்டம்பரில் சென்னை துறைமுகம் கையகப்படுத்தியது.

சென்னை துறைமுகத்தின் நேரடி தொடர்பில், உலகத்தரம் மிக்கதாக, உலர் துறைமுகம் அமையும். பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், ரூ.300 கோடி செலவில், 7 கோடி டன் சரக்குகளை கையாளும் திறனுடன் உலர்துறைமுகம் அமையும். சென்னை துறைமுகத்தில் இருந்து உலர்துறைமுகத்துக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என மத்திய் கப்பல் துறை அமைச்சகம் அறிவித்தது. இதற்காக, உலர் துறைமுகம் அமையும் இடத்திற்கு, போக்குவரத்து வசதி கிடைக்கும் வகையில், திட்டங்கள் வகுக்கப்பட்டு மாநில அரசின் உதவி கோரப்பட்டது. தொடர்ந்து மப்பேடு பகுதியில் தொடங்கப்பட உள்ள உலர்துறைமுகத்துடன் சென்னை துறைமுகத்தை இணைக்கும் வகையில் தண்டலம் - பேரம்பாக்கம் இரு வழிச்சாலையானது,

ரூ.67 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்ட பணிகளை 6 ஆண்டுகளுக்கு முன் அதிமுக அரசு கிடப்பில் போட்டது. இதனால், துறைமுகத்தின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து வசதி இல்லாததால் தனியார் நிறுவனங்கள் உலர் துறைமுக பணிகளை டெண்டர் எடுக்க முன்வரவில்லை. இதனால், உலர் துறைமுகம் அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. தற்போது பறக்கும் சாலைக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளதால், மப்பேடுவில் உலர் துறைமுகம் அமைக்கலாம். இங்கு கண்டெய்னர்கள் வந்து செல்ல வசதியாக சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.எனவே, உலர் துறைமுகம் அமைக்க மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.



Tags : land , Will the dry port project be launched on the 125 acres of land leased for Rs 100 crore in Muppet?
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...