பிரசவத்தின்போது மூளைக்கு செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டதால் பெண் சிசு பரிதாப சாவு: புளியந்தோப்பு அரசு மகப்பேறு டாக்டர்கள், நர்சுகள் மீது புகார்

பெரம்பூர்: பிரசவத்தின் போது மூளைக்கு செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டு பச்சிளம் குழந்தை இறந்ததால் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புளியந்தோப்பு போலீசில் தந்தை புகார் செய்தார். சென்னை ஓட்டேரி ஈடன் கார்டன் குக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (25). மயிலாப்பூரில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த  21ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனே புளியந்தோப்பு அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று காலையில் பிரசவம் பார்க்கப்பட்டது. முகம் சற்று வீக்கத்துடன் பெண் குழந்தை பிறந்தது. மேலும் குழந்தை அழாமல்  இருந்துள்ளது.

இதையடுத்து டாக்டர்கள் அறிவுரைபடி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது. மறுநாள் அதிகாலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிரசாந்த் விசாரித்தபோது, பிரசவத்தின் போது மூளைக்கு செல்லும் நரம்பு குழந்தைக்கு துண்டிக்கப்பட்டுள்ளது’ என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த  பிரசாந்த், புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்து கேட்டார். சரியான பதில் இல்லை. உடனே புளியந்தோப்பு காவல் நிலையத்தில், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார்.  போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: