×

காட்பாடியில் 16.45 கோடியில் கட்டப்படும்: மாவட்ட விளையாட்டு மைதான பணிகள் 90 சதவீதம் நிறைவு: அதிகாரிகள் தகவல்

வேலூர்: காட்பாடியில் 16.45 கோடியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு மைதான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காட்பாடியில் ராணுவ கேன்டீன் அருகே 36.68 ஏக்கர் பரப்பளவில் 16 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மாவட்ட விளையாட்டு மைதான கட்டுமான பணி கடந்த ஆண்டு தொடங்கி, நடந்து வருகிறது.

விளையாட்டு மைதானத்தில், பார்வையாளர் கேலரி, நிர்வாக அலுவலகம், ஹாக்கி, கூடைப்பந்து, கோ கோ, கபடி, இறகுபந்து, டென்னிஸ், நீச்சல்குளம், கால்ப்பந்து, 400 மீட்டர் தடகள ஓடுபாதை உள்ளிட்ட வசதிகள் கொண்டதாக அமைக்கப்படுகிறது. அதன்படி, 1500 பேர் அமரக்கூடிய வகையில் பார்வையாளர் கேலரியின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது, நிழற்கூடம் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. நீச்சல் குளம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது, 400 மீட்டர் ஓடுபாதை, கால்பந்து, ஹாக்கி மைதானங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வரை விளையாட்டு மைதானத்தின் 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கால்பந்து, ஹாக்கி மைதானத்திற்கு இடையே இருந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, தற்போது, மைதானங்களை சமன்படுத்தி, புற்கள் நடுவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் இறுதிக்குள் விளையாட்டு மைதானத்திற்கான பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : completion ,Katpadi ,district playground , Katpadi, District Playground Works, Officers, Information
× RELATED டாஸ்மாக் பார் அருகே பிளாக்கில் விற்க...