×

நெல்லிக்குப்பம், வானூரில் பரபரப்பு: சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை திடீர் ரெய்டு

வானூர்: நெல்லிக்குப்பம், வானூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூரில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 43 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலம் ஆவணம், மனை உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது சார் பதிவாளராக (பொறுப்பு) வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் திடீரென சார் பதிவாளர் அலுவலத்தில் நுழைந்து ரெய்டு நடத்தினர். அப்போது அலுவலகத்தில் கதவை மூடியதால் அங்கு பத்திரம் பதிவு செய்ய வந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் அலுவலகத்தின் உள்ளே மாட்டிக்கொண்டனர். பின்னர் சார் பதிவாளரிடம் விசாரணை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சம் சிக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோயில் அருகே உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மெல்வின் ராஜாசிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்முகம், சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று மாலை 6 மணி அளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் பத்திரம் அடகு வைப்பது சம்மந்தமாக நின்றிருந்த வெள்ளப்பாக்கத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ.1500 பறிமுதல் செய்தனர். பின்னர் அலுவலகம் அருகில் இருந்த பத்திர எழுத்தர் அலுவலகங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு எழுத்தர் அலுவலகத்தில் பணி செய்து வரும் பெண்ணின் பர்சில் இருந்த ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாலை 6மணிக்கு ஆரம்பித்த சோதனை இரவு 9.30 மணியளவில் முடிந்தது. இதில், கணக்கில் வராத ரூ. 58 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Nellikuppam ,raid ,Vanur ,office ,Sir Registrar , Nellikuppam, Sir Registrar, Corruption Eradication Department, Raid
× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது