×

செங்கோட்டை வட்டாரத்தில் ஊரடங்கால் முடங்கிய மர அறுவை தொழில்

செங்கோட்டை: செங்கோட்டை அருகேயுள்ளது பிரானூர் பார்டர் பகுதி.  இங்கிருந்து தென்காசி செல்லும் சாலை பகுதியிலும், பார்டரில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையிலும்  மரங்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும்  150க்கும் மேற்பட்ட மர  அறுவை  தொழில் நிறுவனங்கள் உள்ளன. மிகச் சிறிய  நிறுவனங்கள் முதல் மிகப்பெரிய  மர அறுவை ஆலைகளும் உள்ளன. இங்கிருந்து பிற  மாநிலங்களுக்கு மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் மரங்கள், மரத்துண்டுகள்,  பர்னிச்சர்கள் என கோடிக்கணக்கில் வர்த்தகம்  நடைபெறுகிறது.

இங்கு பர்மா, மலேசியா, கனடா, இந்தோனேஷியா,  அமெரிக்கா, கொரியா  உள்ளிட்ட  வெளிநாடுகளில் இருந்து தேக்கு, கோங்கு, படாக் உள்ளிட்ட பல்வேறு வகையான  மரத்தடிகளை இறக்குமதி செய்கின்றனர். வெளிநாடுகளில் கொள்முதல் செய்யப்படும்  மரத்தடிகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்புகின்றனர்.  அதனை அங்கிருந்து பெரிய லாரிகளில் செங்கோட்டை பார்டரில் உள்ள  மர அறுவை ஆலைகளுக்கு  எடுத்து வருகின்றனர். பின்னர் மர அறுவை ஆலைகளில் நவீன இயந்திரங்களின்  மூலம் மரத்தடிகளை தரம், அளவு வாரியாக துல்லியமாக சிறிய கட்டைகளாக  அறுக்கின்றனர். பின்னர் அவற்றை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள  மரக்கடைகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி  மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

மரக்கடைகளில்  உள்ள தச்சுத் தொழிலாளர்கள் மரக்கட்டைகளை இயந்திரங்களின் மூலம் இழைத்து கதவு,  ஜன்னல், மேஜை, நாற்காலி, கட்டில் போன்ற பல்வேறு பொருட்களாக  வடிவமைக்கின்றனர். இத்தொழிலால் இந்த சுற்று வட்டார பகுதிகளை  சேர்ந்த 10 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வேலைவாய்ப்பு  பெற்று இத்தொழிலை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாது  சுமார்  1500 குடும்பங்களை சார்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம்  நேரடியாக இத்தொழிலை நம்பியே உள்ளது.

இந்நிலையில்  மத்திய அரசின் கொரோனா    ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச்   24ம் தேதி முதல் அனைத்து சிறிய, பெரிய மர  அறுவை ஆலைகளும் மூடப்பட்டன இதனால்  பல கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகத்தில்  நஷ்டம் ஏற்பட்டதோடு இத்தொழிலையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின்  வாழ்வாதாரம்  கேள்விக்குறியானது. குறிப்பாக ஆலைகள் மூடப்பட்டதால் அன்றாடத்  தேவைக்கு கூட வழியின்றி தொழிலாளர்கள் பரிதவித்தனர். கூலித் தொழிலாளர்கள் மட்டுமின்றி  சிறிய பெரிய நிறுவனங்களை நடத்தி வந்த முதலாளிகள் குறித்த நேரத்தில் மர  சைஸ்களை கொடுக்க முடியாமல் திணறினர். பொருளாதாரம் குறைந்தது பண புழக்கம் முழுவதும் குறைந்தது.

இதனால் பணிபுரியும் ஊழியர்களுக்கு  குடும்பத்தை நடத்த மிகச்சிறிய அளவிலான தொகையை வழங்க வேண்டிய  நிர்பந்தத்திற்கு  மர அறுவை ஆலைகள் உள்ளாகின. மேலும் வங்கிகளில் கடன் பெற்று நிறுவனங்களை நடத்தி வந்தவர்கள் கடன்களை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனிடையே திறந்தவெளி மரத்தடிகள் மழையில் நனைந்தும்,  வெயிலில் காய்ந்தும் அதன் தன்மையை இழந்தன. இதனால் இவற்றை குறித்த  விலைக்குக் கூட விற்க முடியவில்லை. மேலும் லாரிகள்  போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டதால்  இங்குள்ள லோடு மேன்கள்,  டிரைவர்கள்,   மரங்களை ஏற்றும் இயந்திரங்களின் டிரைவர்கள்,  அலுவலகத்தில் பணிபுரியும்  ஊழியர்கள், மர அறுவை இயந்திரங்களின் பணிபுரியும் ஊழியர்கள் என பலதரப்பட்ட  மக்களும்  பாதிக்கப்பட்டனர். இதனால் மர அறுவை ஆலைகளுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வறுமையில் வாடுகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டாலும், இந்த பெரும் நஷ்டத்தில் இருந்து ஆலைகள் மீள சில மாதங்கள் ஆகும் என தெரிகிறது.

Tags : Curfew ,area ,Red Fort , Red Fort, woodworking, industry
× RELATED புதுவையில் இரவுநேர ஊரடங்கு ரத்து