×

பசுக்கள் மீது கை வைத்தால் சிறையில் அடைக்கப்படுவார்கள் : உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் திட்டவட்டம்!!

லக்னோ : பசுக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் இந்த செயலில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பசுவதை சட்டம் தவறாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது. இந்நிலையில் உ.பி.யில் நவம்பர் 3ம் தேதி பங்கர்மாவு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி இடைத்தேர்தலின் ஒரு பகுதியாக பிரச்சார பேரணியில் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், பசுக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த செயலில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். பசுக்களை பாதுகாக்கவும், உணவளிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் காப்பகங்கள் கட்டப்படவுள்ளன. இதற்காக மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசிய யோகி, மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள பொது நலத்திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தும் போது பொதுமக்களை சாதி மற்றும் மத ரீதியாக பிரித்துப் பார்ப்பதில்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சில மாஃபியாக்கள் அரசியல் கட்சிகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். ஆனால் அவர்களது சட்டவிரோத கட்டடங்கள் அனைத்தும் இடித்து தள்ளப்பட்டு வருகின்றன.இதன்மூலம் PMAY திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தர உதவிகரமாக உள்ளது. சமூக ரீதியான மோதல்களை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது, என்றார். 

Tags : Yogi Adityanath ,Uttar Pradesh , Cows, Prisoner, Uttar Pradesh, Chief Minister, Yogi Adityanath
× RELATED கொலை, கொள்ளை உள்பட 21 வழக்குகள்:...