×

சூர்யகுமார் அதிரடி ஆட்டம்: பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்: பந்துவீச்சில் பூம்ரா அசத்தல்

துபாய்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சூர்யகுமாரின் அதிரடி அரைசதத்தின் மூலம் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றில் நுழைவதை உறுதி செய்துள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் போலார்டு முதலில் பந்துவீச முடிவு செய்தார். கடந்த போட்டியில் தோல்வியை தழுவியிருந்தாலும், மும்பை அணி மாற்றம் ஏதும் இன்றி களமிறங்கியது. ஆர்சிபி அணியில் சைனி, பிஞ்ச், மொயீன் ஆகியோருக்கு பதிலாக ஷிவம் துபே, ஜோஷ் பிலிப், டேல் ஸ்டெயின் இடம் பெற்றனர்.

பிலிப், படிக்கல் இருவரும் பெங்களூர் இன்னிங்சை தொடங்கினர். துடிப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவரில் 71 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். பிலிப் 33 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி, ராகுல் சாஹர் சுழலில் விக்கெட் கீப்பர் டி காக்கின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்தார். அடுத்து படிக்கல்லுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். சிறப்பாக விளையாடிய படிக்கல் 30 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். கோஹ்லி 9 ரன் மட்டுமே எடுத்து பூம்ரா வேகத்தில் திவாரி வசம் பிடிபட்டார். அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் 15 ரன் (12 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து போலார்டு பந்துவீச்சில் சாஹர் வசம் கேட்ச் கொடுத்து வெளியேற, ஆர்சிபி 15.2 ஓவரில் 131 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து பின்னடைவை சந்தித்தது.

அடுத்து வந்த துபே 2 ரன் மட்டுமே எடுத்து பூம்ரா வீசிய 17வது ஓவரின் 3வது பந்தில் சூர்யகுமார் வசம் பிடிபட்டார். அதே ஓவரின் 5வது பந்தில், உறுதியுடன் விளையாடிக் கொண்டிருந்த படிக்கல் (74 ரன், 45 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விக்கெட்டை பறிகொடுக்க, 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 131 ரன் என்ற வலுவான நிலையில் இருந்து 16.5 ஓவரில் 134/5 என பெங்களூர் அணி 134 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. அடுத்து வந்த மோரிஸ் 4 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. குர்கீரத் சிங் 14 ரன், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட பூம்ரா 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். போல்ட், ராகுல் சாஹர், போலார்டு தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடம் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. டிகாக், இஷான் கிஷன் ஜோடி நிதானமான துவக்கத்தை தந்தனர். டிகாக் 18 ரன்னில் முகமது சிராஜ் பந்திலும், இஷான் கிஷன் 25 ரன்னில் சாஹல் பந்தில் ஆட்டமிழந்தனர். திவாரி (5 ரன்) வந்த வேகத்தில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குருணல் பாண்டியா 10 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் மும்பை பேட்ஸ்மேன்கள் தாக்குபிடிக்காமல் ஆட்டமிழந்த போதிலும், மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் அட்டகாசமாக ஆடினார். இவர் தனி ஆளாக அதிரடியை காட்டி சிக்சர், பவுண்டரிகளை பறக்க விட்டார்.

ஐபிஎல் போட்டியில் தனது 10வது அரை சதத்தை பூர்த்தி செய்த சூர்யகுமார் போட்டியை மும்பை பக்கம் திரும்பினார். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா (17 ரன்) நிதானமாக ஆடி ஒத்துழைப்பு தர, சூர்யகுமார் மும்பைக்கு வெற்றியை தேடித் தந்தார். மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் 43 பந்தில் 79 ரன்களுடன் (3 சிக்சர், 10 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றில் தனது இடத்தை உறுதி செய்துள்ளது. புள்ளிப்பட்டியில் அந்த அணி 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

Tags : Suryakumar ,Mumbai Indians ,Boomera ,Bangalore , Suryakumar in action: Mumbai Indians beat Bangalore: Boomera bowling
× RELATED 2024 ஐபிஎல் தொடர் முதல் 2 போட்டிகளில்...