அயோத்தியை தொடர்ந்து மதுரா, காசியில் உள்ள மசூதிகளுக்கும் ஆபத்து: அரசுக்கு சன்னி வக்பு வாரியம் கோரிக்கை

அயோத்தி: ராமர் கோயிலைத் தொடர்ந்து மதுரா, காசியிலும் இந்து கோயில்களை நிறுவ வேண்டும் என சட்ட போராட்டங்கள் நடந்து வரும்  நிலையில், மத வழிபாட்டு தலங்கள் சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும்,’ என சன்னி வக்பு வாரியம் வலியுறுத்தி உள்ளது.

‘கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15க்கு தேதிக்கு முன் உருவாக்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் அதே நிலையிலேயே தொடர  வேண்டும்,’ என, ‘மத வழிபாட்டு தலங்கள் சட்டம்- 1991’ல் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து, அயோத்தி ராமர் கோயிலுக்கு மட்டும் விலக்கு  அளிக்கப்பட்டது. அந்த வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, மதுரா  மற்றும் காசியில் தற்போதுள்ள மசூதிகளை இடித்து விட்டு ஏற்கனவே அங்கு இருந்த இந்து கோயில்களை கட்ட வேண்டும் என சமீப காலமாக   வழக்குகள் தொடரப்படுகின்றன.

அதே சமயம், விஷ்வ பத்ர பூஜாரி புரோஹித் மகாசபை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் மனுவில், மத வழிபாட்டு தலங்கள்  சட்டம்  1991ன் 4வது பிரிவை நீக்க கோரப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுதான் வேறு மத வழிபாட்டு இடத்தை அகற்றிவிட்டு மீண்டும் கோயில் கட்டுவதை  தடுக்கிறது. இது குறித்து சன்னி வக்பு வாரிய தலைவர் ஜாபர் பரூக்கி அளித்த பேட்டியில், ‘‘மத வழிபாட்டு தலங்கள் சட்டத்தில் தற்போதுள்ள  வழிபாட்டு தலங்களை மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அயோத்தி ராமர் கோயில் தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.  எனவே,   மத வழிபாட்டு சட்டம் அமலில் இருக்கும் வரை, அதை உறுதியாக அமல்படுத்தி, இந்தியாவில் மசூதிகள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்,’’  என கூறி உள்ளார்.

எப்படி இருக்கும்?

உத்தர பிரதேசத்தில் புதிய பாபர் மசூதி கட்ட, அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்துள்ளது. இங்கு மீண்டும் பாபர் மசூதி கட்டுவதற்கான  இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அமைப்பின் தலைவராக பரூக்கி உள்ளார். அவர் புதிய பாபர் மசூதி குறித்து கூறுகையில், ‘‘ஏற்கனவே இருந்த  மசூதியை காட்டிலும் புதிய பாபர் மசூதி பெரிதாக கட்டப்படும். இப்பணியை தொடங்குவதற்கான வேலைகள் போர்க்கால அடிப்படையில் நடக்கிறது.  சர்வதேச கட்டிட கலை நிபுணர்களிடம் ஆலோசனை பெறப்பட்டு உலகத் தரத்தில் மசூதி கட்டப்படும்,’’ என்றார்.

Related Stories: