×

ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள் செய்தவருக்கு தூக்கு: தெலங்கானா நீதிமன்றம் தீர்ப்பு

திருமலை: ஒரு கொலையை மறைக்க 9 பேரை திட்டமிட்டு கொலை செய்தவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தெலங்கானா நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பு வழங்கி உள்ளது. தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், கீசிகொண்டா மண்டலம், கோரிகுண்டாவில் கடந்த மே மாதம் உணவில் தூக்க  மாத்திரை கலந்து கொடுத்து உயிருடன் கிணற்றில் தள்ளி ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர்   கொலை செய்யப்பட்டனர். இது, நாடு முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தலைமறைவான குற்றவாளியை 72 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்கத்தை  சேர்ந்தவர் மசூத். இவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன் கடந்த 20 ஆண்டுகளாக வாரங்கல்லில் உள்ள கீர்த்தி நகரில் வசித்து வந்தார்.

இவருடன் மசூதின் மனைவி  நிஷா, இவரது அக்கா ரபிகா, அவரது ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.  அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த மசூத்திற்கு, பீகாரை சேர்ந்த சஞ்சய் குமார் யாதவ் என்பவருடன் பழக்கம்  ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாகினர். அப்போது, சஞ்சய் குமாருக்கும் ரபிகாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் தனது மூன்று பிள்ளைகளுடன்  சஞ்சயுடன் சேர்ந்து ரபிகா குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், ரபிகாவின் மகளுடன் சஞ்சய் தவறாக பழக முயன்றார். இதனை கவனித்த ரபிகா,  தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி  தனது மகளுடன் நெருங்கி பழகுவதை கண்டித்தார். இதனால், ரபிகாவை கொலை செய்ய சஞ்சய்  திட்டமிட்டார்.

கடந்த மார்ச் 7ம் தேதி ரபிகாவை மேற்கு வங்க மாநிலத்திற்கு ரயிலில் சஞ்சய் அழைத்துச் சென்றார். அப்போது, ரபிகாவிற்கு மோரில் தூக்க மாத்திரை  கலந்து கொடுத்து தூங்க வைத்தார். பின்னர், அதிகாலை 3 மணியளவில் ரபிகாவின் துப்பட்டாவால் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து  ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜ மகேந்திரவரம்  அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது கீழே தள்ளி விட்டு, மீண்டும்  வாரங்கல்லுக்கு வந்தார். பின்னர், சில நாட்களில் நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சஞ்சயிடம் தனது  அக்காள் ரபிகா குறித்து நிஷா விசாரித்தார். அதற்கு,  பீகாரில் உள்ள தனது வீட்டிற்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறி சஞ்சய் சமாளித்து வந்தார்.  ஆனால், அவருடைய பேச்சை நம்பாத நிஷா, உண்மையை கூறாவிட்டால் போலீசில் புகார் தெரிவிப்பதாக மிரட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், நிஷா உட்பட அவரது குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டார். அப்போது, மசூதின் பெரிய மகனுக்கு மே 21ம்  தேதி பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்பதற்காக சென்ற சஞ்சய், குளிர்பானத்தில் தூக்க மாத்திரைகளை கலந்து மசூத் குடும்பத்தினர்,  பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற  பீகார் வாலிபர்கள் 3 பேருக்கும் கொடுத்தார். இதையடுத்து, இரவு 12.30 மணி அளவில் அனைவரும் ஆழ்ந்த  தூக்கத்தில் இருந்தபோது, சஞ்சய் ஒருவர் பின் ஒருவராக கோணிப் பையில் கட்டி அருகில் உள்ள கிணற்றில் தள்ளி, 9 பேரையும் கொலை செய்தார்.  இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், நீதிமன்றம் நேற்று சஞ்சய் குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு  கூறியது.

Tags : murder ,Telangana , Execution of 9 murderers to cover up a murder: Telangana court verdict
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...