×

ஆந்திராவில் இருந்து கருவாடு மூட்டைக்குள் மறைத்து 330 கிலோ கஞ்சா கடத்தல்: 4 பேர் கைது

ஆலந்தூர்: ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அதிக அளவில் விற்பனை செய்வதாக மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்  அகர்வாலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில் பரங்கிமலை மதுவிலக்கு  பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் பரங்கிமலை, ஆசர்கானா பகுதியில் திடீர் வாகன சோதனை நடத்தினர்.  
அப்போது, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கருவாடு ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் கருவாடு  மூட்டைகளுக்கிடையே கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, லாரியை ஒட்டி வந்த  செங்குன்றத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி அங்கு கடத்தி வந்து சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல பகுதியில் உள்ள  சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ததும், மேலும், கஞ்சா வாசனை தெரியாமல் இருக்க கருவாட்டு மூட்டைகளுக்குள் மறைத்து வைத்து  கொண்டு வருவதால் போலீசாரிடம் சிக்காமல் தப்பிவிடுவதாக தெரிவித்தார். இதையடுத்து இந்த கஞ்சா பொட்டலங்களை வாங்க வந்த சோழவரத்தை  சேர்ந்த மகேஷ்(29), புழலை சேர்ந்த முரளி(30), திண்டுக்கல் பகுதியை கஞ்சா மகுடிஸ்வரன்(35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 75 லட்சம் மதிப்புள்ள 330 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரையும் பறிமுதல் செய்த கஞ்சா பொட்டலங்களையும் பரங்கிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இதனையடுத்து அங்குவந்த சென்னை தெற்கு மாவட்ட கூடுதல் கமிஷனர் தினகரன் கஞ்சா லாரியை மடக்கி பிடித்த தனிப்படையினரை  பாராட்டி  வெகுமதி வழங்கினார். அப்போது  தெற்கு இணை கமிஷனர் பாபு, பரங்கிமலை போலீஸ்  துணை கமிஷனர் பிரபாகர், கூடுதல் துணை கமிஷனர்  கோவிந்தராஜூ, உதவி கமிஷனர் ஜீவானந்தம் உடன் இருந்தனர்.

Tags : Andhra Pradesh , 330 kg cannabis smuggled from Andhra Pradesh: 4 arrested
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி