×

நில மோசடி விவகாரத்தில் நடிகர் சூரி புகார் முன்ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி மனு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: நில மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா தாக்கல் செய்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யவுள்ளதாக நடிகர் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முன்ஜாமீன் மனு  மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நவம்பர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சூரி. இந்த படத்தில் அவர் நடித்த சீனை வைத்து இவரை ரசிகர்கள் பரோட்டா சூரி என்றே அழைக்கிறார்கள். இவர் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள வீரதீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் சம்பளத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன், விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர். இந்நிலையில், அந்த நிலத்துக்காக அன்புவேல்ராஜனும், ரமேஷ் குடவாலாவும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக நடிகர் சூரி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் அன்புவேல்ராஜன், ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என்ற பயத்தில் ரமேஷ் குடவாலா சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சூரி தரப்பில் இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து  இடையீட்டு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை நீதிபதி நவம்பர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : DGP ,trial ,I-Court , Former DGP files pre-bail petition against actor Suri over land scam: Court adjourns hearing
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு...