×

பத்து வயதிற்குள் பூப்படையும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம்: மருத்துவர்கள் தகவல்

சென்னை: பத்து வயதிற்குள் பூப்படையும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் மணி, நிலைய மருத்துவ அலுவலர் ஆனந்த் பிரதாப் ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ நிலைய அலுவலர் ஆனந்த் பிரதாப் கூறுகையில், “தமிழகத்திலேயே முதன் முறையாக, மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை என, ஒருங்கிணந்த சிகிச்சை பிரிவு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சை முறையால், புற்றுநோயாளிகள் நீண்டநாள் உயிர் வாழ்கின்றனர்” என்றார்.

இதனைத் தொடர்ந்து கதிரியக்க சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சரவணன் கூறியதாவது:
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், ஆண்டுதோறும், 1,200 புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில், 300 பேர் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். கடந்த காலங்களில், 40 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தான் அதிகளவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். தற்போது, 30 வயதுடைய இளம் வயதினருக்கே பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு, பத்து வயதுக்குள் பூப்படைதல் மற்றும் 55 வயது வரை மாதவிடாய் நிற்காதது போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன. மரபணு சார்ந்த பிரச்னையாலும் பாதிக்கப்படுகின்றனர். முறையான தாய்ப்பால் வழங்காதது, உடல் பருமன் போன்றவைகளாலும், மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. எனவே, ஆரம்ப நிலை பரிசோதனை மற்றும் சுய பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, நீண்ட நாள் உயிர் வாழ முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Tags : Women ,doctors , Women under the age of ten are more likely to develop breast cancer: doctors report
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...