×

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் பெண்ணினத்தையே அவமதித்த சண்முகம் சுப்பையா நியமனம் கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் பெண்ணினத்தையே அவமதித்த சண்முக சுப்பையாவை நியமனம் செய்தது கண்டனத்துக்குரியது. அவரை நீக்கவிட்டு, தமிழக எம்பிக்களுக்கு இடமளிக்க பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுத மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை நிர்வாகக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் நியமிக்காத மத்திய பாஜ அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படவிருக்கிறது. பாஜ எனும் அரசியல் கட்சியின் சொந்தப் பணத்தில் அல்ல.
அப்படியிருக்கும் போது, ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த அதுவும் ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு அநாகரிகமாக, அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் என்ற பெயரில் இருக்கும் சண்முகம் சுப்பையா என்பவரை உறுப்பினராக நியமித்திருப்பது, அதிகார துஷ்பிரயோகம்.

பெண்ணினத்திடம் பாஜவிற்கு இருக்கும் வெறுப்புணர்வை இந்த நியமனம் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. இதுதான் பாஜ ‘பிராண்ட்’ கலாச்சாரமா?. பெண்ணை அவமானப்படுத்திய மருத்துவர் சண்முகம் சுப்பையா இடம்பெற்றுள்ள குழுவிற்கு, எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியின் துணை வேந்தராக இருக்கும் மரியாதைக்குரிய டாக்டர் சுதா  சேசையனையும் உறுப்பினராக நியமித்து அவரையும் மத்திய பாஜ அரசு அவமானப்படுத்தியிருக்கிறது. பெண்களின் பெருமை குறித்த உயர்ந்த சிந்தனை கொண்ட சுதா சேசையன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவிலிருந்து விலகி விடுவதுதான் அவருக்கும் கண்ணியம். அவர் இதுவரை கட்டிக்காத்து வந்த நேர்மைக்கும் அடையாளமாக இருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவினை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அக்குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் சண்முகம் சுப்பையாவை நீக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தனை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் இடமளித்து, ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மருத்துவர் சண்முகம் சுப்பையாவை நீக்கி விட்டு, தமிழக எம்.பி.க்களுக்கு நிர்வாகக் குழுவில் இடமளிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கத்தில் உருப்படியான நடவடிக்கை எதையும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக முன்னெடுக்காத மத்திய பாஜ அரசு, இப்படிப்பட்ட கோணல் புத்தியுள்ள ஒருவரை நிர்வாகக் குழுவில் இணைத்து, பெண்ணினத்தை அவமானப்படுத்திடும் வகையில் அமைத்திருப்பது, தமிழர் பண்பாட்டு அடையாளமாம் கற்புக்கரசி கண்ணகி நீதி கேட்ட மூதூர் மதுரை மாநகரத்தையே அதிர்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படவிருக்கிறது. பாஜ எனும் அரசியல் கட்சியின் சொந்தப் பணத்தில் அல்ல.

Tags : board of directors ,Shanmugam Subbaiah ,MK Stalin ,Madurai AIIMS Hospital , The appointment of Shanmugam Subbaiah to the board of directors of the Madurai AIIMS Hospital is reprehensible: MK Stalin's statement
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...