×

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு (சிபிசிஐடி) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்லூரிகள் தாங்களாகவே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றனர். இது சட்ட விரோதம் என உத்தரவிடக்கோரி டாக்டர்கள் கீதாஞ்சலி, அரவிந்த் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தனியார் கல்லூரிகள் நடத்தலாம் ஆனால் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இறுதிகட்ட கவுன்சிலிங் நடத்த அனுமதி கோரிய தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற தடையை நீக்கினார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:
ஆவணங்களை பார்க்கும்போது மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தகுதியில்லாத 74 பேருக்கு மருத்துவ மேல் படிப்பில் இடம் வழங்கப்பட்டுள்ளது.  கடுமையாக உழைத்து அதிக மதிப்பெண்களை பெற்ற திறமையான மாணவர்களுக்கு முக்கிய பிரிவுகள் வழங்கப்படவில்லை. தேர்வுக் கமிட்டி தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுப்பிய இறுதி பட்டியலில் சம்மந்தப்பட்ட மாணவர்களின் தொடர்பு குறித்த தகவல்கள் தரப்படவில்லை. இதிலிருந்து பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு அந்த இடங்கள் எப்படி வழங்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

பணத்தின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை வழங்கினால், மருத்துவ இடங்கள் பணத்திற்காக விற்கப்பட்டால் அதன் அடிப்படையில் மருத்துவம் படிக்கும் மாணவரால் சமுதாயத்திற்கு எப்படி உரிய மருத்துவ சிகிச்சையை தர முடியும். படிப்பு முடிந்தவுடன் அவர்களை நம்பி வரும் அப்பாவி மக்களின் நோய்க்கான சிகிச்சையை அவர்களால் எப்படி கையாள முடியும். தகுதியில்லாமல் மருத்துவ படிப்பில் சேர்ந்து வெளிவரும் மருத்துவர்களால் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். இதுபோன்ற மருத்துவர்கள் விஷ செடியில் காய்க்கும் பழங்களாகத்தான் இருப்பார்கள். இதை ஏற்க முடியாது. தகுதியில்லா மாணவர்களுக்கு அவர்கள் கேட்கும் முக்கிய பிரிவுகளை கொடுக்காமல் முறைகேடு செய்ததில் மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் அதிகாரிகளின் கூட்டுச்சதி உள்ளது என்வே கருத தோன்றுகிறது.

மருந்துவ மேற்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக மனுதாரர் தரப்பில் கடுமையாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. உதவி கமிஷனர் பதவிக்கு குறையாத அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக சி.பி.சிஐ.டி., டி.ஜி.பி., நியமிக்க வேண்டும். அவர், இந்த முறைகேட்டில் மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் அதிகாரிகளுக்கும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கும் தொடர்புள்ளதா? மாணவர்களுக்கு இடம் தந்ததில் எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது? மற்றும் விசாரணையில் உள்ள தகவல்கள் என அனைத்தையும் விசாரித்து அறிக்கையாக ஜனவரி 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். வழக்கு ஜனவரி 2ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags : Chennai High Court ,CBCID , Chennai High Court directs CBCID inquiry into medical malpractice
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...